செவ்வாய், 25 ஜூலை, 2017

புறநானூறு-218

வடக்கிருந்து உயிர் துறக்க நினைத்த கோப்பெருஞ்சோழன்,  தான் இதுவரை பார்த்தே  இராத தன் நண்பர், புலவர் பிசிராந்தையாருக்கும் தன்னுடைய பக்கத்திலே இடம் போடச் சொல்கின்றார்; தான் இறக்கும் தருவாயில் அவனும் வந்துவிடுவான் என்கின்றார்; அவர் சொன்னதுபோலவே, பிசிராந்தையாரும் வருகின்றார். தன் நண்பர் கோப்பெருஞ்சோழனுடனே உயிர் துறக்கின்றார். அதைப் பார்த்த புலவர் கண்ணகனார் வியந்து போகின்றார். பார்த்தே இராத , வேற்று நாட்டு புலவன்மேல் மன்னன் கொண்ட நட்பும், அந்த நட்புக்கு உரியவனாய் புலவன் இருந்ததையும் பார்த்து சான்றோர் என்றுமே சான்றோர் பக்கமே சார்ந்து இருப்பர்என்கின்றார். இதோ அந்தப் புறநானூற்றுப் பாடல்.
           பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய
           மா, மலை பயந்த காமரு மணியும்,
            இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து,
            அரு விலை நன் கலம் அமைக்கும் காலை,
            ஒரு வழித் தோன்றியாங்கு – என்றும் சான்றோர்            
            சான்றோர் பாலர் ஆப;
            சாலார் சாலார் பாலர் ஆகுபவே.(புறநானூறு.218)
தெளிவுரை                           
பொன், பவளம், முத்து, மற்றும் நிலைபெற்ற பெரிய மலையானது தந்ததாகிய விரும்பத்தக்க மாணிக்கம் ஆகியவை கிடைக்கின்ற இடங்கள் ஒன்றற்கொன்று தொலைவாக இருப்பினும், அரிய மதிப்புடைய நல்ல அணிகலன்களில் அவற்றைச் சேர்த்து வடிவமைக்கும்போது அவை ஒரே இடத்தில்  இணைந்திருக்கின்றன. அதுபோல, சான்றோர்கள் என்றும் சான்றோர்களையே சேர்ந்திருப்பர். அத்தகைய சான்றாண்மை இல்லாதார் சான்றோர் அல்லாதவர்களோடே இணைந்திருப்பர்.
சொற்பொருள் விளக்கம்
 பொன்னும்- தங்கமும், துகிர்- பவளம், முத்து- முத்து, மன்னிய- நிலைபெற்ற, மாமலை- பெரிய மலை,பயந்த தந்த, காமரு மணியும்- விரும்பத்தக்க மணியும்,இடைபட- இடையிலுள்ள, சேய-தொலைவு, ஆயினும்-ஆனாலும், தொடை   கட்டுதல்,புணர்ந்து- இணைத்து,அரு விலை பெரும் மதிப்புடைய, நன் கலம் நல்ல அணிகலன்கள், அமைக்கும் காலை- அமைக்கின்றபோது,ஒரு வழித் தோன்றியாங்கு – ஒன்றாகத் தோன்றுவதுபோல, என்றும் சான்றோர்- என்றைக்குமே சான்றோர், சான்றோர் பாலர் ஆபசான்றோர் பக்கமிருப்பர்,சாலார் சால்பு இல்லாதவர், சாலார் பாலர் ஆகுபவே-சால்பு இல்லாதவர் பக்கமே இணைந்திருப்பர்.
மண்ணிலே கிடைத்தால் என்ன?, மலையிலே கிடைத்தால் என்ன?,  கடலிலே கிடைத்தால் என்ன? எங்கே கிடைத்தாலும் அவை ஒன்றொடொன்று இணைந்து அழகிய அணிகலன்களாகின்றன. அப்படித்தான், இங்கே நாடாளும் காவலனாக இருந்தால் என்ன?  பாவலனாக இருந்தால் என்ன? உயர்ந்த குணவியல்புக்கு முன்னர்,  அனைவரும் ஒன்றுதான்; நான் பெரியவன், நீ தாழ்ந்தவன் என்ற வேறுபாடில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லும் பாடலிது!
  “நான் மன்னன்! எனக்குப் பக்கத்திலே சாதாரண புலவனுக்கு இடம் தரவா?” என்ற எண்ணமே இல்லாமல் இறக்கும் தருவாயிலும் தனக்குப் பக்கத்திலே பிசிராந்தையாருக்கு இடம் தந்தார் கோப்பெருஞ்சோழன்! நட்பையும் தாண்டி ஆணவம் அழிந்த அன்பைத்தான் இங்கே காணமுடிகின்றது!
இவர்களெல்லாம், ‘தான் என்ற அகங்காரம் அழித்ததால் இன்றும் வாழ்கின்றார் நம்மிடையே! என்றும் வாழ்வார் தமிழ் நிலத்தில்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக