சனி, 8 ஆகஸ்ட், 2015

குறுந்தொகை -40



நம் தமிழினத்தின் நாகரிகத்தினைப் படம்பிடித்துக் காட்டும் பாடலிது. இது குறுந்தொகையில் 40 ஆவது பாடல், தலைவனும் தலைவியும் எதிர்பாராமல் சந்திக்கின்றனர்.காதலிக்கின்றனர், அங்கே சாதி, மத வேறுபாடில்லை. ஆனால், தலைவிக்கு தலைவன்மேல் ஒரு சந்தேகம் வருகிறது. இவன் நம்மைப் பிரிந்துவிடுவானோ என்பதுதான் அது! அவளின் இந்த உள்ளக் குறிப்பைக்கூட, அவள் கூறாமலே உணர்ந்து கொள்கின்றான் தலைவன். அவர்கள் கண்ணெதிரே, மழை நீர் மண்ணோடு கலந்து ஓடுகிறது. தலைவியின் அச்சத்தை, எதைச் சொல்லி, எப்படிச் சொல்லித் தெளிவிப்பது? என்று நினைத்தத் தலைவனுக்குக் கண் முன்னே தோன்றும் நீரும் நிலனுமே கைகொடுக்கிறது. “இந்த நிலத்தோடு பிரிக்க முடியாதவாறு மழைநீர் சேர்ந்துவிட்டதல்லவா? அதைப் போன்றதுதான் நம் அன்பும்” என்கிறான் தலைவன். தலைவனின் அன்பு மொழிக்கு முன் தலைவியின் அச்சம் காணாமல் போவது இயல்பு தானே? இதோ பாடல்.... 


 யாயும் ஞாயும் யார் ஆகியரோ

 எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
 யானும் நீயும் எவ்வழி அறிதும்
  செம்புலப் பெயல் நீர் போல
 அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

பாடலைப் பாடியவர்- செம்புலப் பெயல்நீரார்
குறிஞ்சித்திணைப் பாடல்

கருத்துரை
        என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை நீர் எவ்வாறு அம்மண்ணோடு ஒன்று கலந்து பிரிக்கமுடியாதவாறு ஆகிவிடுகிறதோ அதைப்போல ஒன்றுபட்ட அன்பினால் நம் நெஞ்சங்களும் ஒன்று கலந்தன. (அதனால் நெஞ்சம் ஒன்று கலந்த நம் அன்பும் என்றும் பிரியாது. மண்ணோடு கலந்த நீரை எப்படி பிரிக்க முடியாதோ, அவ்வாறே நம்மையும் பிரிக்க முடியாது.)
சொல்பொருள் விளக்கம்
       யாயும்-என் தாயும், ஞாயும்- உன் தாயும், யார் ஆகியரோ- யாருக்கு யார் உறவினர், எந்தையும்- என் தந்தையும், நுந்தையும்- உன் தந்தையும்,எம்முறை- எந்த முறையில், கேளீர்- உறவினர்,யானும் நீயும் நானும்- நீயும் நானும், எவ்வழி- எந்த உறவின் வழியாக, அறிதும்- அறிந்து கொண்டோம்? செம்புலப் பெயல் நீர் போல-செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் போல, அன்புடை நெஞ்சம் - அன்பான நெஞ்சங்கள், தாம் - தாமாகவே(யாதொரு உறவுமின்றி), கலந்தனவே- கலந்துகொண்டனவே.
                   எவ்வாறு மழையினை செம்புலம் ஏற்றதோ அவ்வாறே தலைவனின் அன்பினையும் தலைவி ஏற்றாள். இங்கே நிலம்-தலைவி, நீர்- தலைவன் .


                        பண்பும் அன்பும் போட்டியிடும் இப்பாடல் என்றும் நம் உள்ளத்திலும் செம்புலப்பெயல் நீராதல் இயல்புதானே?

புதன், 29 ஜூலை, 2015

புறநானூறு-194

இன்பமும் துன்பமும் உலகின் இயற்கை என்பதை நன்குணர்ந்தவர்கள் நம் முன்னோர். அதனால், அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதையும் இயல்பாகப் பேசினார்கள். நம்மை நல்லாற்றுப்படுத்தினார்கள்.
சங்கச் சான்றோரின் அப்பாடல்களைப் பார்க்கின்றபோது ஆச்சரியம் மேலிடுகிறது. மயிர்கூச்செறிகிறது. இந்தப் பாடல்கள் எழுதப்பட்ட காலம் இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பிருக்கலாம் என்பதை அறிகின்றபோது, தமிழ் மண்ணின் பண்பட்ட மனத்தையுடைய சான்றோர்களை எண்ணி உள்ளபடியே அகம் மகிழ்கிறோம். இதோ ஒரு புறநானூற்றுப் பாடல். இந்தப் பாடலை எழுதியவர் பக்குடுக்கை நன்கணியார் என்ற புலவர்.
ஒரு வீட்டிலே சாவுப்பறை கேட்கிறது, மற்றொரு வீட்டிலே மண நிகழ்வுக்கான மங்கல ஓசை கேட்கிறது. இப்படி இந்த உலகமானது இன்பமும் துன்பமும் சேர்ந்து படைக்கப்பட்டுவிட்டது. அதன் இயல்பை உணர்ந்து இனியவற்றை மட்டுமே கண்டுணர்ந்து வாழ்வோம் என்கின்றார் புலவர். படைக்கப்பட்ட உலகத்தை மாற்றமுடியாது. ஆனால் அந்த உலகில் இன்னாதவற்றை நீக்கி இனிமையோடு வாழலாமே? என்பதுதான் அவரின் கருத்து. இதோ பாடல்...
ஓர்இல் நெய்தல் கறங்க, ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணிய பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்
இன்னாது அம்ம இவ்உலகம்
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே.(புறநானூறு.194)
கருத்துரை
ஒரு வீட்டில் இழவுப்பறை கொட்டுகிறது. மற்றொரு வீட்டிலோ மகிழ்ச்சியான முழவின் ஓசை மிகுந்து ஒலிக்கிறது.
மணவீட்டிலோ, மணம் முடித்துத் தலைவனோடு  கூடிய பெண்ணோ, பூவும் அணிகலன்களும் அணிந்து இன்புற்றிருந்தாள். இறப்பு நிகழ்ந்த வீட்டிலோ, தலைவனைப் பிரிந்த தலைவியின் மையுண்ட கண்களிலிருந்து நீர்த் துளிகள் சொரிய, துன்புற்றிருந்தாள்.  இவ்உலகத்தைப் படைத்த பண்பில்லாதவனாகிய இறைவன், இவ்வாறு இன்பமும் துன்பமுமாக படைத்துவிட்டான். இந்த உலகமானது கொடியது, துன்பமானது. ஆகவே, இந்த உலகத்தின் தன்மை உணர்ந்தவர்கள், இனியவற்றைக் கண்டுணர்க என்கின்றார்.
பொழிப்புரை
ஓர்இல் – ஒரு வீட்டில், நெய்தல்- சாவுப்பறை, கறங்க- ஒலிக்க, ஓர்இல்- ஒரு வீட்டில், ஈர்ந்தண் – இனிய மகிழ்வான, முழவின்- முழவினுடைய, பாணி – ஓசை, ததும்ப- நிரம்ப,மிகுதியாக, புணர்ந்தோர்-கூடினோர், பூவணி- பூவும் அணிகலன்களும், அணிய- அணிந்து, பிரிந்தோர்-(தலைவனை) இழந்தவர், பைதல்- துன்பம், உண்கண் – மையிட்ட கண்கள், பனிவார்பு- நீர் வார்த்து, உறைப்ப- சொரிய, உதிர்க்க, படைத்தோன் – படைத்த இறைவன், மன்ற- அசைச்சொல், அப்பண்பிலாளன்- அப்பண்பில்லாதவன், இன்னாது- இனிமையில்லாதது, கொடியது, துன்பமானது, அம்ம – அசைச்சொல், இவ்உலகம்-இந்த உலகம், இனிய காண்க – இனிவற்றைக் கண்டு கொள்க, இதன் இயல்பு – உலகின் இயல்பு, உணர்ந்தோரே- உணர்ந்தவர்களே.
“இன்னாது அம்ம உலகம்” என்று நினைத்து, துன்பத்தை மேலும் மிகுவிப்பதை விட்டு உயர்ந்தவற்றை மட்டுமே நினைக்க வேண்டும் என்ற அவரின் விருப்பம், அவரின் உள்ளத்து உயர்வையே காட்டுகின்றது. இவர்களெல்லாம் புலவர் மட்டுமா? வாழ்க்கையை  எப்படி வாழவேண்டும் என்று நமக்குக்  கற்றுக்கொடுத்த,  அனுபவமுடைய ஆன்றோர்களும்கூட!

துன்பம் கண்டு தளரும்வேளையில், நமக்கு அருமருந்தும் ஆற்றலுடை மருந்தும் இதுதானே?