ஞாயிறு, 5 அக்டோபர், 2014

பட்டினப்பாலை-முன்னுரை

முன்னுரை

பத்துப்பாட்டு நூல் வரிசையில் ஒன்பதாவது நூல் பட்டினப்பாலை. இது 301 அடிகளைக் கொண்டது. காவிரிப் பூம்பட்டினத்தைச் சிறப்பித்துப் பாடிய பாலைத் திணைப் பாட்டு. எனவே இது பட்டினப்பாலை எனப்  பெயர் பெற்றது. இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இப்பாட்டுடைத் தலைவன்  சோழ மன்னன் திருமாவளவன். இது ஆசிரிய அடிகள் இடை இடையே விரவி வர, பெரும்பாலும் வஞ்சியடிகளாலான வஞ்சி நெடும் பாட்டு.
காவிரியின் சிறப்பு, காவிரி பாய்வதால் வளம் பெறும் சோழநாடு, காவிரி கடலோடு  கலக்கும் பட்டினத்தின் பல்வேறு வளங்கள், மக்கள் வாழ்க்கை நிலை மற்றும் மன்னனின் ஆட்சிச்சிறப்பு, பட்டினப்பாலையின் சிறப்பு என்று 301 அடிகளில் 296 அடிகளுக்குப் புறப்பொருளையே கூறிய நூல் அகநூலா என்ற கேள்வி எழுவது இயல்பே.
வேலினும் வெய்ய கானம் அவன்
கோலினும் தண்ணிய தடமென் தோளே.
(ஆதலால்)
முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே
என்பதுதான் பாட்டிலுள்ள அகப்பொருள் அடிநாதம். அகப்பொருள் நுவலும் அடிகளும் அவ்வளவே. திருமாவளவனின் பீடையும், பெருமையையும், அவன் ஆட்சிச் சிறப்பாய் பொலிவுற்று விளங்கும் காவிரிப்பூம்பட்டினத்தையும் சிறப்பித்துப் புறப்பொருள் பாடுதலையே நோக்கமாகக் கொண்ட உருத்திரங்கண்ணனார், முழுவதும் புறமானால் கற்பவர் உள்ளம் சலிப்புறுமோ என்று நினைத்தாரோ என்னவோ! பாலிலே சில துளி தேன் கலந்து, கலத்திலுள்ள பால் முழுவதையும் இனிப்பாக்குவது போல, 301 அடிகளையுடைய இப்பாட்டில், 5 அடிகளில் காதற்சுவை கலந்து, தமிழெனும் பொற்கலத்தில் அருந்தத் தந்துள்ளார்; தாம் கூறவந்த புறப்பொருளைப் பின்னணியாக்கி, அகப்பொருள் சிறக்கப் பாடியுள்ளார்; இத்துணையும் ஆசிரியர் கூற்றாக இல்லாமல், தலைவன் கூற்றாக அமைத்து, அக நூலாக்கிய பெருமைக்குரியவர் உருத்திரங்கண்ணனார். வாகையையே பாடினாலும் வகையாய்ப்பாடி, அதனையும் அகமாய்த் தந்தவர் அவர்! 
திருமாவளவன் சோழநாட்டின் தலைநகரை உறையூரிலிருந்து காவிரிப்பூம்பட்டினத்திற்கு மாற்றிய நேரத்தில் உருத்திரங்கண்ணனார், பட்டினப்பாலையை எழுதியிருக்க வேண்டும். புதியது எனின் அதனை வெகுவாகச் சிறப்பித்துப் பேசுதல் நம்மவர் இயல்புதானே? அந்த வகையில் புதிதாகத் தலைநகராகச்  செயல்படத் தொடங்கிய காவிரிப்பூம்பட்டினம் எத்துணை வளங்களை உள்ளடக்கியுள்ளது என்பதை அன்றைய சோழ நாட்டு மக்களுக்கு அறியத் தரும் அரிய முயற்சி! இன்றைய தமிழக மக்கள், அன்றைய தமிழ் மண்ணை அறிந்து கொள்ள உதவும் வரலாற்றுப் பெட்டகம்.
பிரிவின் துன்பத்தை வேலினும் வெய்ய கானம்என்றும் பிரியாமையால் பெறும் இன்பத்தை, ‘தண்ணிய தடமென் தோளேஎன்றும் ஒரு சேரக் கூறி முடித்துள்ளமை படிப்பவர் அனைவருக்கும் இன்பத்தை நல்குவது. பயில்தொறும் பரவசமூட்டுவது. அதிலும் தலைவி தரும் இன்பம் சோழனின், ‘கோலினும் தண்ணியஎன்று வேலையும் கோலையும் உயர்த்திக் கூறி முடிக்கும் திறன் வியப்பில் ஆழ்த்துவது விதந்து கூறுதற்குரியது.
தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.”  (1103)
என்ற குறளை நினைவூட்டுவது.
படித்ததைப் பகர்வதற்கு ஏற்ற இனிய சொற்கள், ஓசை இன்பத்தோடு காட்சிகளைக் கண்முன் கொண்டு வரும் எளிய பதங்கள், அத்துணையும் இனிமை! எத்துணை சொல்லினும் உள்ளம் அடங்காத் தன்மை! இத்துணையும் தருவது பட்டினப்பாலையெனும் பைந்தமிழ் இலக்கியம்!
                

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

கடியலுர் ஊரின் பெயர்; உருத்திரன் தந்தையின் பெயர், கண்ணன் ஆசிரியர்  பெயர்; ஆர் உயர்வு பற்றியது என்று சான்றோர் நுவலுவர். பெரும்பாணாற்றுப்படையை எழுதியவரும் இவரே. இவர் அந்தணர். தொல்காப்பிய மரபியல் 74-ஆம் நூற்பாவிற்கு உரை வகுத்த பேராசிரியர், ‘.......கடியலூர் உருத்திரங்கண்ணனார் முதலிய அந்தணர்க்குரியனஎன்பதால் இதனை உணரலாம். பெரும்பாணாற்றுப்படையில், முந்நீர் வண்ணன் (30) என்று திருமாலும்,
நீணிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற்குப் பயந்த பல்லிதழ்
தாமரைப் பொகுட்டு........ (402 - 404)
என்று அவரின் உந்தித் தாமரையும்’,
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்’ (375)
என்று திருமாலின் கோவிலையும் குறித்தள்ளமை நோக்கி இவரை வைணவர் என்பர். இதனை இவர், பெரும்பாணாற்றுப்படை பாட்டுடைத் தலைவனின் விருப்பம் நோக்கிப் பாடியிருக்கலாம்; மக்களாலும் இக்கோவில் பெரிதும் விரும்பி வணங்கப்பட்டிருக்கலாம்; அதனால், அனைவருக்கும் தெரிந்த இடத்தைச் கூறி, பெரும்பாணனுக்கு வழி கூறி ஆற்றுப்படுத்த முக்கிய இடமாக்கியிருக்கலாம். பட்டினப்பாலையிலும்,
செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்
வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்’  (154 - 155)
என்று முருகனைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ஆதலின் எந்தெந்த இடத்தினை மையமாக வைத்துப் பாடினாரோ, அந்தந்த இடத்திருப்போர் வணங்கிய தெய்வங்களை முன்னிறுத்திச் சென்றுள்ளார் என்றே கொள்ளலாம்.
பட்டினப்பாலையைப் பாடியமைக்காகப் புலவருக்குப் பதினாறு நூறாயிரம் பொன் கொடுத்துச் சிறப்பித்தான் திருமாவளவன்.
தழுவு செந்தமிழ் பரிசில் வாணர்பொன்
பத்தொடு ஆறு நூறாயிரம் பெறப்
பட்டினப்பாலை கொண்டதும் (198)
என்று கலிங்கத்துப்பரணி இந்நிகழ்வைக் குறிப்பிடுகின்றது. இச்சேய்தி, தமிழ்விடு தூதிலும் பாடியதோர் வஞ்சி நெடும்பாட்டால் பதினாறு கோடி பொன் கொண்டது நின்கொற்றமே’ (198) என்று கூறப்பட்டுள்ளது. பொன் மட்டுமல்ல வயிரமும் முத்தும் பதித்த பதினாறு தூண்களைக் கொண்ட பொன் மண்டபமும் மன்னன் புலவருக்குக் கொடுத்ததாக ஒட்டக்கூத்தரின் இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் இயம்புகிறது….’
அன்று கவிக்கு வியந்து நயந்து
தரும் பரிசிற்கு ஒருபேர்
ஆழியில் வந்து தராதலம் நின்று
புகாரில் அனைத்துலகும்
சென்று கவிக்கும் அகத்தது தூண்வயி
ரத்தினும் முத்தினுமே
செய்ததோர் பொற்றிரு மண்டபம்
நல்கிய செயகுல நாயகமே”  (41)
இம்மண்டபத்தை, *கி.பி. 1219-இல் (*பத்துப்பாட்டு ஆராய்ச்சி டாக்டர் மா. இராசமாணிக்கனார், முதற்பதிப்பு (1970), ப. 259) சோணாட்டை வென்று உறையூரை அழிக்கத் தொடங்கிய முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இடிக்காமல் விட்டனன் என்று திருவெள்ளறைக் கல்வெட்டுச் செய்யுள் கூறுகின்றது.
வெறியார் தளவச் செயத்தொடை மாறன்
வெகுண்ட தொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டின்
அரமி யத்துப்
பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப்
பாலைக்கு அன்று
நெறியால் விருந்தூண் பதினாறு மேஅங்கு
நின்றனவே
என்பது அக்கல்வெட்டுச்  செய்யுள். தன் அரும்பெருஞ் சாதனைகளைப் புலவர் தீந்தமிழில் தீட்டியதைக் கண்ட மன்னன் பெருமகிழ்வு எய்திபெரும் பரிசில் நல்குதல் இயல்பு தானே? எனினும் திருமாவளவன் அளித்த பரிசுத் தொகையும், பதினாறுகால் பொன் மண்டபமும் அறியும் நமக்கு, அற்றைத் தமிழகத்தின் செல்வ வளத்தினும், எத்துணைப் பரிசிலும் இத்திறமைக்கு ஈடல்ல என்று புலவோர் திறம் போற்றிய மன்னனின் மனமே வியப்பைத் தருவதாய் அமைந்துள்ளது.
        உருத்திரங்கண்ணனார் பாடியதாக அகநானூற்றில் ஒரு (167) பாடலும், குறுந்தொகையில் ஒரு (352) பாடலும் இடம்பெற்றுள்ளன. குறுந்தொகைப்பாடல் தலைவன் பிரிவினால் தலைவி வருந்திக் கூறும் பாலைத்திணைப் பாடல், அகநானூற்றுப் பாடல் பொருளுக்காகப் பிரிய நினைத்த நெஞ்சிடம், தலைவியைப் பிரிய இயலாது எனத் தலைவன் கூறுவதாக அமைந்த பாடல். இந்தப் பாடல் பட்டினப்பாலையின் கருத்தை அப்படியே ஒத்து இருப்பது! பிரிவிற்கும் உருத்திரங்கண்ணனாருக்கும் உள்ள தொடர்புதான் என்னவோ? அருந்தமிழ்க் கவி யாத்த ஆயிரமாயிரம் ஆண்டுகள் தமிழ் மண்ணிலே நின்று நிலைபெறும் கவிவல்லார் உருத்திரங்கண்ணனாரை வணங்குவோம். அவர்தம்  செந்தமிழ்த் தேன் பருகி இன்புறுவோம்.

பாட்டுடைத்தலைவன் திருமாவளவன்

        திருமாவளவன் என்னும் சோழமன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடியதே பட்டினப்பாலை. சங்க காலச் சோழ மன்னர்களில் சிறந்தவன். உருவப் பல்தேர் இளையோள் சிறுவன் (130) என்று பொருநராற்றுப்படை கூறுதலால், பரணரால் (புறம். 4) பாடப்பெற்ற உருவப்பல்தேர் இளஞ்சேட் சென்னி இவன் தந்தை என்பது தெரிய வருகிறது.
        மாமன்னராக விளங்கிய திருமாவளவனைப் புகழ்ந்து முடத்தாமக் கண்ணியார் பொருநராற்றுப்படை படைத்துள்ளார். அந்நூல் பத்துப்பாட்டில் இரண்டாவது நூல். இது தவிர வெண்ணிக் குயத்தியார் (புறம். 66), கருங்குழலாதனார் (புறம். 7, 224) ஆகியோர் பாடிய பாடல்களும், இவனது தந்தையைப் பாடியவராகிய பரணர், இவனைப் பாடிய அகநானூற்றுப் பாடல்களும் (125, 246) நக்கீரர் பாடிய (அகம். 141) பாடலும் இவன் புகழினைச் செப்புகின்றன. இவன் காலத்துப் பரணியும் கூட வளவனின் வென்றிச் சிறப்பை நுவலுகின்றது.
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதுஒன்று இல் (குறள். 233)
என்ப, இன்று வரை புகழ் குன்றாது வாழ்பவன் கரிகாலன் என்னும் திருமாவளவன்.

திருமாவளவன் கரிகாலனா?

        திருமாவளவன் என்று பட்டினப்பாலையில் வழங்கப் பெற்ற சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான் என்ற புகழ் பெற்ற சோழ மன்னனா என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவி வந்துள்ளன.
        கரிகாலனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பொருநராற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ள, ‘தாய் வயிற்றிருந்து தாயம் எய்திய’ (பொருநர். 132) செய்தி, விரிவாகப் பட்டினப் பாலையில் சிறையிலிருந்து வெளியே வந்து அரசுரிமையைப் பெற்ற செய்தியாக, ‘உருகெழு தாயம் ஊழின் எய்தி (பட்டினம். 227)’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு செய்திகளும் ஒன்றே. பாட்டுடைத் தலைவன் பெயர் பட்டினப்பாலையில் திருமாவளவன். பொருநராற்றுப்படையில் கரிகால் பெருவளத்தான். இப்படி வேறுபட்ட பெயர் கொடுத்திருப்பதற்கான காரணமும் நாமறிந்ததே.
        பொருநராற்றுப்படை எழுதப்பட்ட காலத்துக் கரிகாலனின் வென்றிச் சிறப்பும், காடு கொன்று நாடாக்கி குளந்தொட்டு வளம் பெருக்கிய செயலும் நடைபெறாமையால் கரிந்த கால்களையுடையவன் என்ற அவன் இளமை வாழ்வு நிகழ்ச்சியை அடியொற்றி கரிகால் வளவன்என்றனர் போலும்! பட்டினப்பாலை எழுந்த காலத்து பல்வேறு வெற்றிகளைப் பெற்று, பன்னாட்டு வாணிபத்தையும் பெருக்கி நாட்டை பல நிலைகளிலும் உயர்த்திக் கொண்டிருந்தான். கரிகாலன். எனவே அவன் ஆட்சிச் சிறப்பால் திருமாவளவன்என்று அழைக்கப் பட்டிருக்கலாம்! கரிகாலனைப் பாடிய பொருநராற்றுப்படையின் இறுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் வெண்பாவும் திருமாவளவன் என்றே குறிப்பிட்டுள்ளது.
அரிமா சுமந்த அமளி மேலானைத்
திருமா வளவன்.........
இதுவும் பொருநராற்றுப்படை எழுந்த காலத்து அன்றி, பிற்காலத்தே எழுதிச் சேர்க்கப்பட்டதென்பதால், இதிலும் கரிகாலன் பல வெற்றிக்குப் பின் திருமாவளவன்என்றே சுட்டப்பட்டுள்ளான் என்பதை உணர முடிகிறது. பட்டினப்பாலை இறுதியிலும் கரிகாலனின் கால் நெருப்புற்ற செய்தியைக் குறிப்பிடும் வெண்பா காணப்படுகிறது. இஃது இருநூல்களின் பாட்டுடைத்தலைவனும் ஒன்றே என்பதைப் பெற வைப்பதாக உள்ளது.
        பொருநராற்றுப்படையிலும், பட்டினப்பாலையிலும் கூறப்படாத கரிகாலனின் இமய வெற்றியைச் சிலப்பதிகாரமும், கலிங்கத்துப்பரணியும் (கண்ணி 196), விக்கிரம சோழனுலாவும் (கண்ணி 13) பதிவு செய்துள்ளன. அதுவும் சிலப்பதிகாரம் திருமாவளவன் என்றே குறிப்பிட்டு (காதை, 5, 90) அவனது இமய வெற்றியைக் கூறுகிறது. பொருநராற்றுப்படையில் கூறப்பட்ட மன்னனின் வெண்ணிப் போர் வெற்றி பட்டினப்பாலையில் இல்லை. பட்டினப்பாலையில் சொல்லப்பட்டுள்ள வெற்றிகள் பொருநராற்றுப்படையிலும் சிலப்பதிகாரத்திலும் இல்லை. கரிகாலன் வேறு திருமாவளவன் வேறு என்று கொள்ளுதற்கு இடமில்லை. எனினும் கரிகாலனின் இமய வெற்றி, பிற வெற்றிகளினும் சிறந்ததால், சிறப்பான வெற்றியைச் சிலப்பதிகாரம் செப்பியது போலும்! என்றாலும் சிலப்பதிகாரக் காலத்திற்கும் கரிகாலன் காலத்திற்கும் கால இடைவெளியும் அதிகமிருக்க வாய்ப்பில்லை. அதனால் கரிகாலனைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் இளங்கோவடிகள் அறிந்திருக்க வாய்ப்புண்டு, பசுமையான நினைவுகளாய் அவை பதிந்திருக்கவும் இடமுண்டு, ஆதலின் அவனைக் குறிக்கும் இரண்டு பெயர்களையும் இடமறிந்து இயம்பினர் என்றே கொள்ளலாம்(*பத்துப்பாட்டு ஆராய்ச்சி, டாக்டர் மா. இராசமாணிக்கனார், மு.ப. (1970), ப. 264.) *“மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர் வீட்டுச் சிலப்பதிகார மூலப் பிரதியில், இரண்டாம் காதையின் மூன்றாம் அடி, “கரிகாற் பெரும்பெயர் திருமாவளவனைஎன்று இருப்பதும் கவனிக்கத்தகும்”  என்ற குறிப்பும் இவண் கொள்ளுதற்குரியது.

கரிகாலனின் இளமை வாழ்வு

        திருமாவளவன் தாய் வயிற்றில் இருந்த பொழுதே, தந்தை இறந்துபட, அப்பொழுதே அவன் அரசுரிமை பெற்ற போதும் உறவினர் இவனை ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிடாது சிறையிலிட்டனர் கூட்டினள் அகப்பட்ட புலிபோல் அறிவும் திறனும் ஒருங்கு பெற்று வளரும் நாளில், சிறைச்சாலையைத் தீயிட்டுக் கொளுத்தித் திருமாவளவனை அழிக்க நினைத்தனர். சிறைக் கூடத்தைத் தகர்த்து வாட்போர் செய்து வெளியேறி நாட்டுரிமை பெற்றான் கரிகாலன். இதனைப் பொருநராற்றுப்படையும், பட்டினப்பாலையும் உருகெழு தாயம் ஊழின் எய்தி’, ‘தாய் வயிற்றிருந்து தாயம் எய்திஎனப் பகருகின்றன. இந்நிகழ்வில் திருமாவளவனின் கால் தீயில்பட்டு கருகிவிட, கரிகாலன் என்றே அழைக்கப்பட்டான். கரிகாலன் என்பது நெருப்பில் கால் கரிந்தமையால் உண்டான பெயர் என்பதைப் பட்டினப்பாலையிலும் பொருநராற்றுப்படையிலும் இறுதியில் அமைந்த வெண்பா,
முச்சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால்
இச்சக் கரமே அளந்த கால் - செய்ச்செய்
அரிகால்மேல் தேன்கொடுக்கும் ஆய்புனல்நீர் நாடன்
கரிகாலன் கால்நெருப் புற்று
என்கிறது.
கண்ணார்க் கண்ணி கரிகால் வளவன் (பொருந. 148)
பெருவளக் கரிகால் (அகம். 125)
பெரும் பெயர்க் கரிகால் (அகம்.246)
என்றும்
விண்பொரு பெரும்புகழ் கரிகால் வளவன் (சிலம்பு. காதை 6, 160)
மன்னன் கரிகால் வளவன் (சிலம்பு. காதை 21, 11)
என்று சிலப்பதிகாரத்திலும் கரிகாலன்என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருத்தல் உளங்கொளத்தக்கது. கரிகாலன் இளமையிலே ஆட்சிப் பொறுப்பை ஏற்று, தந்தை வழிகாட்டுதல் இன்றியே திறமையாகச் செயல்பட்டான் என்பதை,
உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுதுமக்கள் உவப்ப - நரைமுடித்துச்
சொல்லால் முறை செய்தான் சோழன் குலவிச்சைக்
கல்லாமல் பாகம் படும் (6)
என்ற பழமொழிப் பாடல் விதந்தோதியுள்ளது.
“.....முதியோர்
அவை புகு பொழுதில்தம்  பகைமுரண் செலவும்” (187 - 188)
எனப் பொருநராற்றுப்படையும் இதனைக் குறிப்பாகச் சுட்டியுள்ளது.
இளமை நாணி முதுமை எய்தி
உரைமுடிவு காட்டிய உரவோன் மருக (9, 107 - 108)
என மணிமேகலையிம் இந்நிகழ்வைப் பகர்ந்துள்ளது.
திருமாவளவனின் வென்றி வாழ்வு
தமிழக வெற்றி
சிறையிருந்த மன்னன் சீறி எழுந்து பகைவரை வெற்றி கொண்டு, தன் படை பெருக்கி வளமொடு வாழத் தலைப்பட்டான். அவன் பெற்ற வெற்றிகள், அவனின் மன எழுச்சியைக் காட்டுவன.
        பாண்டிய, சேர மன்னர்கள் வெண்ணி எனும்  இடத்தில் நடந்த போரில் இறந்ததைப் பொருநராற்றுப்படையும் பிற சங்க இலக்கியங்களும் நுவலுகின்றன.
இருபெரு வேந்தரும் பொருகளத் தவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள்
கண்ணார்க் கண்ணி கரிகால் வளவன்
(பொருந. 146 - 148)
இப்போரில் சேரனின் புறப்புண் நாணி வடக்கிருந்து உயிர் விட்ட தற்கொலைக் கொடுமையையும் சங்க இலக்கியங்கள் கூறியுள்ளன. போர் நடைப்பெற்ற வெண்ணி ஊரைச் சார்ந்த குயவர் மகள்,
களிறு இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று அமர்க்கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்தி
புறப்புண் நாணி வடக்கிருந் தோனே!
என்று, மாபெரும் மன்னனாம் கரிகால் வளவனின் வென்றிச் சிறப்பைச் சொன்னதோடு விடவில்லை! உன்னை விட உயர்ந்தவன், புறமுதுகிலே உன் வேல் தைத்ததை எண்ணி வெட்கி, தன் உயிரையே வடக்கிருந்து துறந்தானே, அவன்தான்!என்றார். மனதில் பட்டதை மறைத்த, தன்னலம் பேணி, மன்னனை வாயாரப் புகழ்ந்து பேசாத புலவரின் பொய்மையில்லா புகர்க்குரலும் ஒலிக்கின்றதன்றோ? இவரைத் தவிர, மாமூலனாரின் (புறம். 66. 3 - 8) பாடலும், பரணரின் (அகம். 246, 8 - 12) பாடலும் இப்போர் வெற்றியைப் பாடியுள்ளன. இப்போரில் 11 வேளிர் குறுநில மன்னர்களும் இறந்தனர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போர் அன்றியும் வாகைப் பறந்தலை என்ற ஊரில் நடைபெற்ற போரிலும், இவன் முன்னால் நிற்க முடியாமல் ஒன்பது வெண் கொற்றக்குடையையும்  களத்திலே போட்டுவிட்டு ஓடிய பெருமையில்லா மன்னர்கள் எனக் கரிகாலனின் வென்றிச் சிறப்புப் போற்றப்பட்டுள்ளது.
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்
சூடா வாகைப் பறந்தலை, ஆடுபெற,
ஒன்பது குடையும் நண்பகல் ஒழித்த
பீடில் மன்னர்
 (அகம். 125, 18 - 21)
இவ்வாறு பல வெற்றிகளைப் பெற்றும் மகிழாதவனாய் மீண்டும் போர் உடற்றுவதில் பெரு விருப்புடையவனாய்த் திகழ்ந்தான்
பெற்றவை மகிழ்தல் செய்யான், சற்றோர்
கடியரண் தொலைத்த கதவுகொள் மருப்பின்
முடியுடைக் கருத்தலைப் புரட்டும் முன்தாள்
உகிருடையடிய ஓங்கு எழில் யானை” (பட்டினப். 228 - 231)
கரிகாலனின் யானைப்படை, பகையரசர்களின் மதிலையும் வாயிற்கதவுகளையும் மருப்பினால் அழிப்பதோடு, பகைவர்களின் மணிமுடி அணிந்த தலைகளைத் தன் முன் கால்களால் உருட்டும்  பெற்றியது. இவன் படைச் சிறப்பால் பாழ்பட்ட இடங்களும் பல; அழிந்த அரசர்களும், அடங்கிய மன்னர்களும்  பலர்.
பல்ஒளியர் பணிபு ஒடுங்கத்
தொல் அருவாளர் தொழில் கேட்ப
வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் திறல்கெடச் சீறி, மன்னர்
மன்எயில் கதுவும் மதனுடை நோன்தாள்
மாத்தானை மறமொய்ம்பின்
செங்கண்ணால் செயிர்த்து நோக்கிப்
புன்பொதுவர் வழிபொன்ற
இருங்கோவேள் மருங்கசாய (பட்டின. 274 - 82)
என்கிறது பட்டினப்பாலை.
ஆந்திர வெற்றி
தமிழகத்தின் இருபெரு வேந்தர்களையும், குறுநில மன்னர்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த கரிகாலன், ஆந்திர நாட்டிலும் கடப்பை, கர்நூல் மாவட்டங்களையும் வெற்றி கொண்டான்.
கதிரவன் மரபைச் சேர்ந்த கரிகாலன் மேற்கு நிலப்பகுதியை வென்று இந்நாட்டையும் *(ரேநாண்டையும்) கைப்பற்றினான்”1 (1. Early History of Indian, V.A. Smith, Vol. II, p. 344)
இமயவெற்றி
பன்னாட்டை வெற்றி கொண்ட பெருவளத்தான், வடநாடு சென்று வான்பொரு நெடுவரை  இமயத்தின் புலி பொறித்த நிகழ்வைச் சிலப்பதிகாரம் செப்புகிறது.
செருவெங் காதலின் திருமாவளவன்
 ............................................
இமயவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி ஏற்றிக் கொள்கையின் பெயர்வோற்கு” (5; 90, 97 - 98)
என்றும்,
பொன்னிமயக் கோட்டு புலிபொறித்து மண் ஆண்டான்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் (17; 30 - 31)
என்றும்,
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அதுவோச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி (7; 2 : 1)
என்றும் கரிகாலனின் வடநாட்டு வெற்றி குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வெற்றி

        கரிகாலன் கங்கை வரை சென்றவன் என்பது மட்டுமல்ல, கடல் கடந்தும் சென்று தன் கால் பதித்தவன் என்பதை இலங்கை வரலாறு கூறுகின்றது.
        “வசபன் என்ற சிங்கள வேந்தன் கி.பி. 67 முதல் கி.பி. 111 வரை அரசாண்டான். அவன் கரிகாலன் வலிமை பெறுவதை அறிந்து, இலங்கையில் தக்க பாதுகாப்புகளை மேற்கொண்டான். வசபன் மகனான வங்க நாசிக திஸ்ஸன் (கி.பி. 111 - 114) காலத்தில் கரிகாலன் படையெடுப்பு இலங்கை மீது நடைபெற்றது. சோழன் பன்னிராயிரவர் சிங்களவரைச் சிறை செய்து சோணாட்டுக்குக் கொண்டு சென்றான்”2 (2. டாக்டர் மா. இராசமாணிக்கனார், பத்துப்பாட்டு ஆராய்ச்சி, ப. 250.) என்பதால் அறியலாம்.
வளம் பெருக்கிய வளவன்
        போர் வெற்றி மட்டும் குறிக்கோள் அல்ல, நாடும் மக்களும் வளம் பெற நாளும் திட்டங்கள் வகுத்துச் செயலாற்றியவன் கரிகாலன்.
        காடு கொன்று நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கினான்.
        “கரிகாலன் காவிரிக்கும் கரை இடுவித்தான் என்று தெலுங்க சோழர் பட்டயம் கூறுகிறது”1 (1. Early History of Indian, V.A. Smith, Vol. II, p. 344, டாக்டர் மா. இராசமாணிக்கனார், பத்துப்பாட்டு ஆராய்ச்சி, ப. 250.)
நுரைத்தலைக் குரைபுனல் வரைப்பகம் புகுதொறும்
புனலாடு மகளிர் கதுமெனக் குடைய
(பொருந. 240 - 41)
வயலுக்குக் கரை அமைத்திருப்பதை வரப்பு (வரைப்பு) என்று சொல்வது போல, ஆற்றுக்குக் கரை அமைத்துத் தடுத்து நிறுத்தி, கரை அமைத்துள்ள இடத்திற்குள் நீர் புகும்போது, அந்நீர் மகளிர் நீராடினர் என்பதால் கரிகாலன் காவிரிக்குக் கரை கட்டிய செய்தி பெறப்படுகிறது.
        “ஆதித்தன், முதற்பராந்தான், ஆட்சிக்காலக் கல்வெட்டுகள் சில காவிரி கரையைக்  கரிகாலக் கரை என்று கூறுகின்றன. இது பற்றியே இவனைப் பொன்னிக்கரை கண்ட பூபதிஎன்று கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன் உலாவில் புகழ்ந்துள்ளனர்’‘2. (2. பிற்காலச் சோழர் சரித்திரம், பி.வி. சதாசிவ பண்டாரத்தார், மூன்றாம் பகுதி, பக். 84 – 86) இவ்வாறு காவிரிக்குக் கரை இடுவித்துச்  சோழ நாட்டின் நீர் வளம் பேண, அணை எடுப்பிக்கும்  பணியில் பலரையும்  ஈடுபடுத்தியுள்ளான் என்பதை அவனைப் பற்றிய செப்பேடுகளும் இலக்கியங்களும் செப்புகின்றன.
        “சோழன் பன்னீராயிரவர் சிங்களவரைச் சிறை செய்து சோணாட்டுக்கே கொண்டு சென்றான். காவிரிக்குக் கரையிடுப்பித்தான்”3 (3. Early History of India, V.A. Smith, ed, 4, p. 481, History of Ceylon, Vol.I Part. I. pp. 181 – 182)  வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் அல்லாது தனக்கு அடங்கிய சிற்றரசர்களையும் வரவழைத்தான். அவர்களும் கரையிடும் பணியில் தங்கள் ஆட்களை ஈடுபடுத்தினர். திரிலோச்சனன் என்ற பல்லவன் மட்டும் வரவில்லை, கரிகாலன் தன் அரும்பணியில் வந்து உதவி செய்யாத முக்கண்டியைப் (திரிலோச்சனனின் மற்றொரு பெயர்) போலப் படம் வரைந்து அவனது மூன்றாம் கண்ணைப் படிமத்திர் குத்தினானன் என்பது வரலாறு”1 (டாக்டர் மா. இராசமாணிக்கனர், மேற்படிநூல், ப. 253, பகுதி, பக். 84 – 86)
        சயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியிலும் இந்நிகழ்ச்சி,
தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
        தொடர வந்திலா முகரி யைப்படத்து
எழுது கென்று கண் டிதுமி கைக்கண் என்று
        இங்கழிக்கவே அங்கழித்தும் (கண்ணி 197)
என்று கூறப்பட்டுள்ளது. ஓட்டக்கூத்தரின் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் உலாவிலும்,
        மண் கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதான்
        கண்  கொண்ட சென்னிக் கரிகாலன் (கண்ணி 18)
என்று, மேற்கண்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டுப்புறக் கதையாகிய வலங்கையர் கதையும், கரிகாலன் கரை கட்டப் பலரையும் கூலியின்றி வேலையாளாக நியமித்திருந்தான் என்பதைப் பகருகிறது. “....ஏழ்மையுற்று பஞ்சத்தால் வாடிய காலத்தில் காவிரி அணைகட்டக் கூலியில்லாமல் வேலை செய்யும்படி உத்தரவிடப்பட்டார்கள். அரசனுடைய ஆணைப்படி கூலியில்லாமல் வேலை செய்யும் முறைக்கு வெட்டிஎன்ற பெயர் வழங்கப் பெற்று வந்தது. வெட்டி முறையை எதிர்த்து ஏழு சகோதரர்கள் போராடினார்கள். அரசன் கரிகால் வளவன் ஆறு சகோதரர்களின் தலைகளைத் துண்டித்துவிட்டான். ஏழாவது சகோதரனும் கூடை எடுத்து மண் சுமக்க மறுத்தான். அவன் சிறுவனானதால் நாடு கடத்திவிட்டான்”2
        என்று காவிரிக்குக்கரை கட்ட அறமும் பேணி, குன்றா வளனொடு சோணாட்டைக் காத்தவன் கரிகாலன். காவிரியின் வெள்ளத்தைச் சீர்ப்படுத்திச் சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையூட்டாகச் செய்தவன். (ஒருவேலி நிலம், ஆயிரம் கலம் நெல் விளையும்படி, காவிரி நீர் கொண்டு  விளைச்சலைப் பெருக்கியவன்) காவிரியின் வளமே தன் நாட்டின் வளம், என்றலால் புதுப்புனலை வரவேற்றுப் புனலாட்டு விழாவினை, நடத்தியவனும் இவனே.
        ‘விண்பொரு  பெரும்புகழக கரிகால வளவன்
        தண்பதம் கொள்ளும் தலைநாள் போல’ (சிலம்பு. 6; 159 - 160)
(வானளாவ புகழ் கொண்ட கரிகால் வளவன் புதுப்புனலில் புகுந்தாடும் விழாவில் முதல் நாளன்று, புத்தாடைகளால் தன்னை அலங்கரித்துக் கொள்ளுவது போல்) என்பதால் வளம் போற்றி வாழ்ந்தவன் வளவன் என்பது புலனாகிறது.

அகவாழ்வும் இறுதி வாழ்வும்

        பசுமணி பொருத பரேர்  எறுழ்க் கழற்கால்
        பொற்றொடிப் புதல்வர் ஓடி ஆடவும்
        முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவும்
        செஞ்சாந்து சிதைந்த மார்பின்  (பட்டின. 294 - 97)
என்பதால் அவன் புதல்வர்கள் ஒடி விளையாடுதலாலும், மனைவியர் மார்பைத் தழுவுதலாலும், மார்புச் சந்தனம் சிதைந்தவன் என்பதை அறியத் தருகிறது பட்டினப்பாலை. புற வாழ்வில் பொறுப்புடன் வாழ்ந்த வளவன், அக வாழ்விலும் இன்பமுடன் வாழ்ந்தவன் என்பதையும் பெற  முடிகிறது. இம்மாமன்னனுக்கு ஆதிமந்தியார் என்ற பெண்பாற் புலவரும் மகளாய் இருந்தனர் என்பதைச் சிலப்பதிகாரம் செப்புகிறது. வஞ்சின மாலையில் கண்ணகி கூறும் பத்தினிப் பெண்டிர் எழுவருள் இவரும் ஒருவர்.
        “மன்னன் கரிகால் வளவன் மகள், வஞ்சிக்கோன்
         தன்னைப் புனல் கொள்ளத் தான் புனலில் பின் சென்று
        ’ கன்னவில் தோளாயோஎன்னக் கடல் வந்து
        முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டு
        பொன்னங் கொடிபோல் போதந்தாள்”  (சிலம்பு. 21, 11 - 15)
கரிகால் வளவன் மகளாகிய ஆதிமந்தி, வஞ்சி மன்னன் ஆட்டனத்தியை மணந்தான். புனலாட்டு விழாவில், காவிரிப் பெரு வெள்ளம் ஆட்டனத்தியை அடித்துச் செல்ல, புனல் செல்லும் கரை வழியே நடந்தனள், தன் காதலனைத் தேடினள், ‘மலையொத்த தோளனாயோஎன்று தன் கணவனை அழைத்துக் கதறினள்; கடல் அவனை, அவள் முன் காட்டியது. காட்டவும் அவனைத் தழுவிக் கொண்டு, பூங்கொடி போல் ஊர் திரும்பினாள்.
        அக வாழ்விலும் புற வாழ்விலும் இசைந்து, இசை வாழ்வு வாழ்ந்த மன்னனின் இறுதி வாழ்வைப் பற்றிக் கருங்குழலாதனார் கலங்கிப் பாடிய பாடலும் சங்க இலக்கியத்தில் உண்டு. வடநாட்டோடு வாணிபம் சிறந்தமையால் இவன் காலத்து ஆரியத் தொடர்பும் அதிகரித்தது. வேள்விகள் செய்தலிலும் அந்தணர் பேணுதலிலும், பெரும் முனைப்புக் காட்டினான் கரிகாலள். இப்படி அமைந்த அவன் இறுதிக்காலப் பகுதியைச் (புறம். 224) சுட்டுகிறது இப்பாடல்.
        அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்
        இரும்பாண் ஒக்கற் கடும்பு புரந்ததூஉம்
        அறம் அறக்கண்ட நெறிமாண் அவையத்து
        முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
        தூஇயல் கொள்கைத் துகள்அறு மகளிரொடு
         - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -- - - -
        வேதவேள்வித் தொழில் முடிந்த்தூஉம்
        அறிந்தோன் மற்ற அறிவுடையாளன்
        இறந்தோன் தானே; அளித்து இவ்வுலகம்
        - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -- - - -
        பூவாட் கோவலர் பூவுடன் உதிரக்
        கொய்து கட்டு அழித்த வேங்கையின்
        மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே.
கோவலர், வேங்கை மரத்தின் பூக்கள் உதிர, கிளைகளை வெட்டிக் கழிப்பது போல, கரிகாலன் இறந்த போது அவன் மகளிரும் அணிகலன் களைந்தனர்.
        கரிகாலன் இலங்கை வேந்தன் வசபன் காலத்திலும் (கி.பி. 67 -111), அவன் மகள் வங்க நாசிக திஸ்ஸன் காலத்திலும் (111 -114), வாழ்ந்தான் என்பதை இலங்கை வரலாறும் நாட்டுப்புறக்கதைகளும் கூறுகின்றன. இதை வைத்து நோக்க, கரிகாலனின் காலம் கி.பி.115க்குள் இருக்கலாம்.
        காலத்தால் அழிக்க முடியா வரலாறாய் இலங்கும் கல்லணையைக் கட்டுவித்த கரிகாலனின் வாழ்க்கைப் போர், வீறுடன் எழுந்து வேள்வியுடன் முடிந்தமை வீர வரலாற்றின் வெற்றிக் கல்வெட்டு.

பட்டினப்பாலை - பொருட்சுருக்கம்

        வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி பாய்வதால் வளமோடு விளங்கியது சோழ நாடு. கரும்பாலைகள், தெற்கழனிகள் சூழ்ந்துள்ள அந்நாட்டில், நெற்கூட்டின் நிழலில் எருமைக் கன்றுகள் படுத்துறங்கும். இங்குத் தென்னை, வாழை, கமுகு, பனை, மஞ்சள், மா, இஞ்சி, சேம்பு என மருத நில வளம் செறிந்து காணப்படும். இங்குள்ள பெரிய வீடுகளின் அகன்ற முற்றத்தில் காய வைத்திருக்கும் உணவுப் பொருட்களைத் தின்ன வரும் கோழிகளைப் பெண்கள், தம் பொற்குழைகளை எறிந்து விரட்டுவர். இக்குழைகள் சிறுவர்கள் தெருவில் உருட்டி விளையாடும் மூன்று சக்கரத் தேரினை முன்னே போகவிடாது தடுக்கும். இந்தத் தடைகளைத் தவிர மனம் கலங்கும் வகையில் பகை எதுவும் இங்கு இல்லை.
        சோழ நாட்டின் தலைநகரம் காவிரிப்பூம்பட்டினத்தில் உப்பை விற்று நெல்லை வாங்கிக் கொண்டு வந்த படகுகள் நிறுத்தப்பட்டிருக்கும். உப்பங்கழி சூழ்ந்த தோட்டங்களும், தோப்புகளும். சோலைகளும், உயர்ந்த கோவிலும், அதனோடு இணைந்தாற்போல பல்நிற பூக்களும் விளங்கும் பொய்கையும், இரு ஏரிகளும் இருந்தன. நீர் வளமும், நில வளமும் நிறைந்த காவிரிப்பூம்பட்டினத்தில் இடையறாது உணவினைச் சமைத்து வழங்கும் அட்டிற்சாலைகளும் உண்டு. புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கதவுகளையுடைய அவ்வட்டிற்சாலைகளில் வடிக்கப்பட்ட சோற்றுக் கஞ்சியானது, ஆறுபோலப் பரவி தெருக்களில் ஓட, ஓடும் சோற்றுக் கஞ்சியைப் பருக வந்த எருதுகள் தம்முள் சண்டையிட்டுக் கொள்ள, சோற்றுக்கஞ்சி சேறானது. சேறான கஞ்சி, உலர்ந்து கிடக்க, அதன்மீது தேர்ஓட, சேறு துகளாகிப் புழுதியாக எங்கும் பரந்தது. இப்புழுதி வெண்மையான அரண்மனை மீது படிய, புழுதி பூசிய யானை போல் காட்சியளித்தது அரண்மனை.
        கேணியோடு எருதுகள் நிற்கின்ற சாலையும், சமண, புத்த மதத் தவப்பள்ளிகளும், முனிவர்கள் வேள்வி செய்யும் தாழ்ந்த மரச் சோலைகளும் உண்டு. அவ்விடத்தில் முனிவர்கள் செய்கின்ற வேள்வித் தீயினை வெறுத்து குயில்கள், அச்சோலையினை விட்டு நீங்கி, யாரும் புக முடியாத நகருக்குச் சென்று, அங்கே வாழும் புறாக்களோடு தானும் ஓரிடத்தில் தங்கின.
        மறவர்கள் போர்ப்பயிற்சி செய்கின்ற இடங்களும் உண்டு. பழைமையான மரம்; முதுமையான மரம். அம்மரத்தின் கீழே மணல் மேட்டிலே வீரர்கள் கூடியிருப்பர். அவர்களோடு அவர்களின் சுற்றத்தினரும் வந்திருப்பர். இறால் மீனைச் சுட்டுத் தின்பர்; வயல் ஆமையை அவித்து உண்பர்; அடப்பம் பூவைச் சூடுவர்; ஆம்பல் மலரை அணிவர்; வானத்தில் கோளும் நட்சத்திரங்களும் உலவுவது போல, வீரர்கள் பலருடனும் சேர்ந்து, அப்பொதுமன்றத்தில் உலவுவர். பின் வீரர்கள் தமக்குள் கைகளாலும், படைக்கலன்களாலும் வலிமை காட்டிப் போரிடுவர். அவ்விளையாட்டுப் போரில் கூட புறம் கொடுத்துச் செல்ல விரும்பாமல், கவணில் கல் வதைது பனைமரத்தில் எறிந்து தன் வலிமையை வேறு விதத்தில் காட்டுவர். இவர்கள் எறிந்த கல்லைக் கண்டு அஞ்சி, பனைமரத்தில் வாழ்ந்த பறவைகள் அவ்விடத்திலிருந்து பறந்து செல்லும்.
        வீரர்கள் விளையாட்டுப்போர் செய்யும் களரியை அடுத்து, புறச்சேரி இருந்தது. அங்குகு குட்டிகளோடு பன்றிகளும் பல இனக் கோழிகளும் சுற்றுத் திரியும். அவ்விடத்து உறை கிணறுகளும் உண்டு. இப்புறச்சேரியிலே, செம்மறி ஆட்டுக் கிடாய்களோடு கௌதாரிப் பறவைகளும் விளையாடிக் கொண்டிருக்கும். கடற்கரையை ஒட்டிய சேரிப்பகுதியில் பரதவர் குடிசைகளும் உண்டு. குறிகிய கூரையினையுடைய அவர்களின் வீட்டில், நீண்ட மீன் தூண்டிலைச் சார்த்தி வைத்திருப்பர். வீட்டு முற்றத்து மணலில், மீ வலையை உலர்த்திருப்பர். பரதவர் முழுநிலா நாளில் (பௌர்ணமி) கடலில் மீன்பிடிக்கச் செல்லாது, தழையாடை உடுத்த தம் மனைவியோடு சேர்ந்து வீட்டில், சினையான சுறாமீனின் கொம்பினை நட்டு, அதில் தெய்வத்தை வருவித்து வழிபாடு செய்வர். தெய்வத்திற்குப் படைத்த கள்ளைப் பருகியும், தாழை மலரைச் சூடியும் மகிழ்வர். தாம் விரும்பும் உணவினையும் உண்டு ஆடுவர். தெய்வ வழிபாட்டுக்குப் பின், கடலோடு காவிரி கலக்கும் சங்கமத் துறையில், தமது தீவினை நீங்க கடலாடுவர். கடலாடிய மாசு போக, காவிரியில் குளிப்பர். கடற்கரையில் நண்டுகளைப் பிடித்து ஆட்டியும் கடல் அலைகளிலே ஆடியும், கடற்கரை மணிலில் வண்டற்பாவை செய்தும் ஐம்பொறிகளாலும் இன்பத்தை நுகர்வர். இப்படி பகற்பொழுதெல்லாம் கடற்கரையில் விளையாடியும் அவ்விடத்தை விட்டுச் செல்ல மனமின்றி விளையாடிக் கொண்டிருந்தனர். இத்தகைய பெறுதற்கரிய சுவர்க்கலோகத்தைப் போன்று விளங்கும் காவிரிப்பூம்பட்டினத்துச் சங்கமுகத்துறைப் பாக்கத்து வாழும் செல்வச் செழிப்பு மிக்க இள மகளிர், கணவரோடு இன்பம் துய்க்கும் இரவுப் பொழுதில் பட்டாடையைக் களைந்து பருத்தி ஆடை உடுத்துவர். இன்ப மயக்கத்தில் கணவர் அருந்தும் மதுவினைக் குடிப்பர். கணவர் அணியும் கண்ணி எனும் மாலையினை அணிவர். ஆண்களோ, மகளிர் அணியும் கோதையினைச் சூடிக் கொள்வர். இரவின் கடைசி யாமத்தில் அப்பெரிய வீடுகளின் மேல் மாடங்களில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள விளக்குகள் பல தூண்டுவாரின்றி அணைவதால் அவற்றின் எண்ணிக்கை குறைதலை வைத்து இரவு நேரத்தைக் கணக்கிட்டு மீன் பிடிக்கச் சென்ற பரதவர் கரைக்குத் திரும்புவர். உயர்ந்த மாடங்களில் வாழ்ந்த மக்கள், நாடகங்களை விரும்பிப் பார்த்தும், நிலவின் காட்சி அழகினைக் கண்டும், பாடல்களைக் கேட்டும் அவ்விரவுப்பொழுதில் இன்புற்றனர்.
        காவிரிப்பூம்பட்டினத்துச் செல்வப் பெண்டிரும் மைந்தரும் இன்பமாக இரவு நேரத்தைக் கழித்து, உறக்கம் கொண்ட அந்நேரத்திலும், காவிரிக் கரை மணலிலே சிறிது நேரமே உறங்கி, தன் பணியினைச் சோர்விலாது செய்தனர் சுங்கம் வாங்குவோர். கப்பலிலிருந்து பொருட்களை நிலத்தில் இறக்குவதும், நிலத்திலிருந்தும் பொருட்களைக் கப்பலிலே ஏற்றுவதுமாக இறக்குமதியும் ஏற்றுமதியும் நடந்து கொண்டிருக்கும் இடத்தில் அளவிட்டுக் கூற முடியாத அளவிற்குப் பல பொருட்களும் வந்து குவிந்து கொண்டேயிருக்கும். அவற்றிற்குச் சுங்கம் வாங்குவோர், புலிச்சின்னம் பொறித்து பண்ட சாலையிலிருந்து வெளியேற்றிக் கொண்டிருப்பர். இப்பொருட்கள் விற்கப்படும் கடைவீதியும் உண்டு.
        அங்காடித் (கடை) தெருவில் உயர்ந்த மாளிகைகளும் இருந்தன. அவ்வீடுகளின் மேல் மாடத்தில் நின்று பெண்கள், தென்றல் நுழையும் வழியில் பொருத்தி நின்று, தம் வளையணிந்த கைகளைக் குவித்து, வீதியில் முருகனுக்கு நடைபெறும் வெறியாட்டு நிகழ்வினைக் கண்டு முருகனை வணங்கி நிற்பர். இவ்வெறியாட்டு விழா நிகழ்த்தும் மகளிர் பாடும் பாடலுக்கு ஏற்றவாறு குழல், யாழ், முரசு போன்ற இசைக்கருவிகளும் இசைந்து ஒலிக்கும். இவ்வாறு திருவிழாக்கள் நீங்காது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடை வீதியிலே பல்வேறு நிறக்கொடிகளும் பறந்து கொண்டிருக்கும்.
        தெய்வக் கோயில்களிலுள்ள கொடியும், வீரர்களை வழிபடும் நடுகல் இருக்குமிடங்களில் ஏற்றப்பட்டுள்ள கொடியும், கல்வி கேள்விகளில் சிறந்தோர் வாதிடும் இடத்தில் ஏற்றியுள்ள கொடியும், கப்பல்களின் மேல் பறக்கின்ற கொடியும், கள் விற்கும் இடத்தில் ஏற்றியிருக்கும் கொடியும், பல்வேறு கொடிகளும் சூரியனின் கதிர் காவிரிப்பூம்பட்டினத்தில்  புக முடியாதவாறு நிழல் பரப்பிப் பறந்து கொண்டிருந்தன.
        பல்வேறு கொடிகளும் பறந்து கொண்டிருக்கும் காவிரிப்பூம்பட்டினத்தின் எல்லையில், கப்பலிலே வந்த குதிரைகளும், வண்டியிலே வந்த மிளகு மூட்டைகளும், வடக்கிலிருந்து வந்த மணியும் பொன்னும், மேற்கு மலைச் சந்தனமும், அகிலும், தென்கடலில் கிடைக்கும் முத்தும், கீழ்க்கடல் பவளமும், கங்கை நதி வாரிக் கொண்டு வந்த பலவகை செல்வங்களும், காவிரியின் நீர் வளத்தால் விளைந்த பொருட்களும், இலங்கையிலிருந்து வந்த உணவுப் பொருட்களும் கடாரத்திலிருந்து (பர்மா) வந்த அத்தர், கற்பூரம் போன்ற நுகர் பொருட்களும் மற்றும் அரிதான பொருட்களும், பெரிதான பொருட்களும் மிகுதியாகக் குவிந்து கிடக்கும் அகன்ற தெருக்கள் இருந்தன. அத்தெருக்களில் உழவரும் வணிகரும் வாழ்ந்தனர்.
        உழவர்களின் வாழ்க்கை, வலைஞர் (பரதவர்), விலைஞர் (இறைச்சி விற்போர்) போன்றோருக்கு உதவுவதாலும், தேவர்களைப் போற்றி, வேள்வி செய்து, பசுக்களோடு எருதுகளையும் பேணி, அந்தணர் புகழ் பரப்பி, விருந்தினர்க்கு உணவளித்தலோடு, உணவுப் பொருட்களையும் வழங்கும் குளிர்ந்த நிழலை மக்களுக்குக் கொடுக்கின்ற வாழ்க்கையாக அமைந்திருந்தது.
        வணிகர்களோ, தமது குலத்துக்கு வரும் பழிக்கு அஞ்சி, உண்மையைப் பேசி, தமது பொருளையும் பிறரது பொருளையும் ஒன்றாக மதித்து மிகுதியாகக் கொள்ளாமலும், குறைவாகக் கொடுக்காமலும் பல பொருட்களும் விற்றனர்.
        வேளாளரும் (உழவர்), வணிகர்களும் அல்லாமல் பிற நாடுகளிலிருந்து வாணிகம் செய்வதற்காக வந்தவர்களும், அந்நகரில் வாழ்ந்தனர். வேற்று நாட்டுக்குச் சென்றிருந்த உறவினர்கள் ஊர் திருவிழாவிற்கு வந்திருப்பது போல, பல நாட்டிலிருந்து வந்திருந்தோரும் உறவினர் போல, கலந்து பழகி இன்புற்று வாழ்ந்த பட்டினம் காவிரிப்பூம்பட்டினம்.
        அத்தகு செழுமையான சிறந்த பட்டினத்தையே எனக்கு உரியதாகத் தந்தாலும் என் தலைவியைப் பிரிந்து மனமே உன்னுடன் வர மாட்டேன் நீ வாழ்வாயாகஎன்று கூறி, தலைவன் பொருள் தேடச் செல்வதைத் தவிர்த்தனன் என்று சொல்லிப் பாலைத்திணையில் முடித்த, இத்துணை வளத்தையும் பட்டினத்தில் உருவாக்கிய வளவனின் வாழ்வை வாகைத்திணையில் நுவலுவர் உருத்திரங்கண்ணனார்.
        தாய் வயிற்றில் இருந்த போது தந்தை இறக்க, உறவினர் சிறைப்படுத்தி, அரசுரிமையைப் பறித்துக் கொள்ள, கூட்டிலே அடைபட்ட புலிக்குட்டி போல இருந்து சிறையில் வளர்ந்தான். பின் வலிமையால் சிறையிலிருந்து வெளியேறி, வாட்போர் செய்து பகைவரை வென்று அரசுரிமையைப் பெற்றான். அவன் அரசுரிமை பெற்றவுடன் அதனோடு அமைதி அடையவில்லை. அவனது யானை, குதிரை, காலாட்படைகளோடு சென்று, பகைவர் நாடுகளை அழித்தான். மருத நில ஊர்களை அழித்து, மக்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றினான். வளம் செறிந்த பகைவர்  நாட்டு ஊர்களெல்லாம் நீரின்றி வறண்டன. அருகம் புற்களும், கோரைப் புற்களும் படர்ந்து, மான்கள் துள்ளி விளையாடும் இடமாயின.
        வளவன் போர் உடற்றுவதற்கு முன்பு பகைவர் நாட்டில் கடவுள் உறைகின்ற கந்தழியாகிய பொதுமன்றம் கொண்டி மகளிர் பலர் தொழும் இடமாகவும் புதியவர்கள் வந்தால் தங்குமிடமாகவும் இருந்தது. ஆனால் வளவன் போர் உடற்றிய பின்பு, யானை தன் பிடியோடு உராய்ந்தது தங்குமிடமாயின. கூத்தரும் விறலியரும் கூத்து நிகழ்த்திய விழாக்கள் நடந்த பொதுமன்றம், நரி ஊளையிட, ஆண்டலைப் பறவையும், கோட்டாமும் கத்தப் பேய்களும் ஆடும் இடமாக மாறியது.
        இடையறாது விருந்தினர்களுக்கு உணவினை வழங்கிய வீடுகளை வேடுவர்கள் கொள்ளையிட்டுச் சென்றதால், நெல்லின்றி இருந்த நெற்கூடுகளின் உள்ளிருந்துக் கோட்டான்கள் கத்தின.
        கரிகால் வளவன் நினைத்ததைச் செய்து முடிக்கும் திறனுடையவனாய் இருந்தனன். மேலும் மேலும் மன எழுச்சியோடு ஆட்சியை விரிவுபடுத்த விரும்பினன். அவனிடம் ஒளிநாட்டார் பணிந்தனர்; அருவா நாட்டார் ஏவல் கேட்டு நடந்தனர்; வடநாட்டார் வாடினர்; குட நாட்டார் வலிமை குன்றினர்; பாண்டியன் அழிந்தான்; இவன் சினந்து நோக்கிய அளவிலே இடைக்குல வேந்தர்கள் அழிந்தனர்; இருங்கோவேள் சுற்றத்தோடும் சாய்ந்தான்.
        திருமாவளவன் பெற்ற வெற்றிகள் அவனை மேலும் செயல்படத் தூண்டின. நாட்டை விரிவுபடுத்தக் காட்டை அழித்தான், குளங்களை வெட்டி நீர் வளத்தைப் பெருக்கினான். காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராக்கினான்; தலைநகரில் அரண்மனையோடு மக்கள் வாழும் குடியிருப்புகளையும் உருவாக்கினான்; மதிலையும் வீரர் பதுங்கம் இடங்களையும் அமைத்தான்; திருமாவளவனின் மதில், புறங் கொடாது போர் செய்யும் வீரர்கள் இருப்பதால், மின்னல் ஒளி போல் ஒளி வீசியது.
        வளவனின் புகழ் கேட்டு பகைவரும் அஞ்சி அடிபணிய, பகையரசர்களின் மணிமுடிபட்ட வீரக்கழல் அணிந்த கால்களை உடையவன்; விளையாடுவதாலும், மனைவியர் தழுவுதலாலும் பூசிய சந்தனம் சிதைந்த மார்பினை உடையவன்.
        திருமாவளவன் பகைவர் மீது வீசிய வேலைவிட கொடியது. நான் செல்ல நினைத்த காடு; அவனின் செங்கோலை விட குளிர்ச்சி உடையன என் தலைவியின் மென்மையான தோள்களே.
        ஆட்சியாளனுக்குத் தேவை, மறமும் அறமும் என்பது நோக்கி, வெம்மையும் தண்மையும் கூறி, திருமாவளவனைச் சிறப்பித்தும், மென்னை தலைவியிடத்து இருத்தலே சிறப்பு என்பதால் தன்மை மட்டுமே தலைவிக்குரியதாய் காட்டியும் உலகியல் உண்மையை உணர்த்தி முடித்திருக்கும் கவிஞரின் திறன் உணர்ந்து இன்புறத்தக்கது.

        நாட்டுத் தலைவன் வெம்மையும் தண்மையும் கொண்டிருப்பின் நாடு சிறக்கும்; வீட்டுத் தலைவி மென்மை கொண்டிருப்பின் வீடு சிறக்கும். இதுவே பட்டினப்பாலை தந்த நற்பொருளாம்.