புதன், 7 நவம்பர், 2012

முல்லைப்பாட்டும் பண்டைத் தமிழகமும்


முல்லைப்பாட்டும் பண்டைத் தமிழகமும்


முன்னுரை
பத்துப்பாட்டில் மிகச் சிறிய நூல் முல்லைப் பாட்டு.  காடும், காடு சார்ந்த இடங்ளையும் கொண்ட  முல்லையில் நடக்கும் அகப்புறக் காட்சிகள், நப்பூதனாரின் கைவண்ணத்தில், சொற் சித்திரமாய் உருவான அழகிய நூல்.  இந்நூல் பண்டைத் தமிழகத்தினை நாமறிவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.  இந்நூலிலிருந்து நாம் பெறும் செய்திகளை இக்கட்டுரையில் காண்போம்.
முல்லை சான்ற கற்பு - சிறப்பு
முல்லைத் திணைக்குரிய சிறப்பே கற்புதான்.  அதனால்தான், முல்லை சான்ற கற்பென்றனர்.  கற்பென்பது உடல் சார்ந்த ஒன்றாகக் கருதப்படும் இந்நாளில், அது உள்ளம் சார்ந்த ஒன்று என்பதை அறிவிக்கும் நூல் முல்லைப்பாட்டு. கற்பெனப்படுவது சொற்திறம்பாமைஎன்பது ஔவையின் கூற்று.  அப்படியானால், ‘கற்பு என்ற சொல்லின் பொருள், சொல் மாறுபடாமல் நடப்பதேயாகும் என்பது தெளிவாகிறது.  இதைத்தான் முல்லைப்பாட்டும் உணர்த்துகிறது.
பிரிந்து சென்ற தலைவன் வரும் வரையில் தலைவி ஆற்றியிருத்தல் மட்டுமே கற்பு நெறி அன்று.  தலைவியிடம் கூறியபடியே தலைவனும் சொன்ன சொல் தவறாமல் குறித்த காலத்தில் வந்து சேருவதும் கற்பின்பாற்படும் என்று பால்பாகுபாடின்றி, பொது நிலை நோக்கோடு கற்பின் சிறப்பை அறிவுறுத்துகிறது முல்லைப்பாட்டு.
முல்லைப்பாட்டின் தலைவி, ‘நெஞ்சாற்றுப்படுத்த நிறைதபு புலம்பொடு நீடு நினைந்த தேற்றியும்(81-82) என்று தன் நெஞ்சினை ஆற்றுப்படுத்தி, தலைவனிடம் நீவிர் வினைமுடித்து வரும் வரை, ‘வருந்தேன்என்று சொல்லிய சொல்லிலிருந்து மாறுபடக் கூடாது என்பதற்காக, தன்னைத் தேற்றிக்கொண்டு வாழ்கின்றாள்.  தலைவனும், போர் வினை முடித்து திரும்பும் வேளையில் வழியிலே கார்காலத்து மலர்கள் மலர்ந்திருப்பதைப் பார்க்கின்றான். தான் தலைவியிடம்  வருவேன் என்ற சொன்ன காலம் வந்துவிட்டதை அறிந்து, உள்ளத் துடிப்போடு துனை பரிதுரக்கும் செலவினனாகவிரைந்து வருகின்றான்.  இங்கே தலைவனும் தலைவியும் கற்பு வாழ்க்கையின் இலக்கணம் இதுதான் என்பதை நமக்கு அறிவிக்கின்றனர்.  இருவரும் சொல் திறம்பாமல் நடந்து கற்பு நலம் பேணுகின்றனர்.
இனிய இல்லறத்திற்கு வழிகோலிய, தலைவனும் தலைவியும் இணைந்து செயலாற்றும் இனிய உளப்பண்புக்குப் பயன்படுத்தப்பட்ட கற்புஎன்ற சொல், இன்று பொருள் மாற்றம் பெற்று, பெண்ணின் உடல் சார்ந்து வழங்கப்படுவது சிந்திக்கத்தக்கது.
முல்லை - தெய்வம்
முல்லைத் திணைக்குத் தெய்வமாகச் சொல்லப்பட்ட மாயோன் குறித்த செய்தியோடு நூலின் துவக்கம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
காடு சார்ந்த இடத்திலே வாழ்ந்த மக்களின் தலைவனாக விளங்கிய மாயோனைச் சங்கு, சக்கரம் பொறித்தவனாகவும், திருமகளைத் தாங்கும் தடக்கைக் கொண்டவனாகவும்  காட்டியிருப்பது, தமிழரின் சமயச் சிந்தனைகள் வளர்ந்த பிறகு எழுந்த நூல் முல்லைப்பாட்டுஎன்பதைத் தெரிவிக்கிறது.
முல்லை நிலத்து மக்கள்
தமிழரின் முல்லைநிலக் காட்டில் வாழ்ந்த மக்கள் ஆயர். இவர்களைப் பற்றிய குறிப்பும் இந்நூலில் கிடைக்கிறது. சிறிய கயிற்றிலே கட்டப்பட்டுள்ள கன்று, தாயின் வரவு பார்த்து வருந்துகிறது.  அதற்கு ஆயர் மகள், ‘வளைந்த கோலினையுடைய கோவலர் பின்னே நின்று செலுத்த, இப்பொழுதே உனது தாயர் வந்துவிடுவர்என்று கூறுகின்றாள்.  கன்றிடம்கூட அன்பு கனிந்த சொற்களைப் பேசும் ஆயர்குலப் பெண்ணின் இயல்பும், மழைக்காலக் குளிரில் நடுங்கியவாறு, தன் கைகளைத் தோள்களில் கட்டியிருக்கும் அப்பெண்ணின் தோற்றமும் பழந்தமிழ் மக்களாகிய ஆயரின் வாழ்வியலை நம் கண் முன்னே கொண்டு வரும் உணர்வோவியமாகும்.
பண்டைத் தமிழரின் பயன்பாட்டுக் கருவிகள்
          ஆயர்கள், ஆநிரைகளை மேய்ப்பதற்கு, வளைந்த கோலினைப் (கொடுங்கோல் (15)) பயன்படுத்தியுள்ளனர்.
          யானைப்பாகர், யானையை அடக்குவதற்குக் கவை முள் கருவி(35)யை உபயோகித்துள்ளனர்.
          குதிரையை ஓட்டுவதற்கு, மத்திகை (59) எனும் கருவியைப் பயன்படுத்தியுள்ளனர்.
          வில் (39), பூந்தலைக் குந்தம் (41) கிடுகு (கேடயம்) (41) வாள் (46) எடுத்து எறி எஃகம் (வேல்) (68) பகழி (73) போன்ற போர்க் கருவிகளும் தமிழரின் பயன்பாட்டில் இருந்துள்ளமை முல்லைப்பாட்டால் அறிய முடிகிறது.
          வெற்றியைத் தெரிவிக்க, முரசு அறைந்தனர் என்பதை முரசு முழங்கு பாசறை (79) என்ற அடியிலும், ஊது கொம்பும், சங்கும் முழக்கினர் என்பதை வயிரும், வளையும் ஆர்ப்ப (92) என வரும் அடியிலும் அறிந்து கொள்ள முடிகிறது.
நால்வகைப் படைகள்
          யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை எனும் நால்வகைப்படைகளும் இருந்துள்ளன என்பதனை முல்லைப்பாட்டு தெரிவிக்கிறது.
          மன்னன் பகைவரோடு செய்த போரில், பகைவர் எடுத்தெறிந்த வேல் நுழைந்தமையால் புண்பட்ட யானையினையும், அடிபட்ட பாம்பு துடிப்பதுபோல் ஆண் யானையின் பருத்த துதிக்கை வெட்டுப்பட்டு வீழ்ந்து துடித்ததையும்,
எடுத்துஎறி எஃகம் பாய்தலின், புண்கூர்ந்து,
பிடிக்கணம் மறந்த வேழம் வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய      , (68 - 70)
என்று கூறியுள்ளதால் யானைப் படையும்,
தேம்பாய் கண்ணி நல்வலம் திருத்தி,
சோறுவாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்(71 - 72)
என்பதால் காலாட்படையும்,
தோலால் செய்யப்பட்ட கடிவாளத்தையும் அறுத்துக் கொண்டு கூரிய முனையுடைய அம்புகள் பாய்ந்ததால் காதுகளைச் சாய்த்து உணவு உண்ணாது வருந்தும் குதிரைகள் குறித்து,
          தோல்துமிபு, பைந்துனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து உண்ணாது உயங்கும் மா
(
73 - 74) என்று உணர்த்துவதால் குதிரைப் படையும், ‘வினை விளங்கு நெடுந்தேர்’ (103) என்பதால் தேர்ப்படையும் முல்லைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள.
போர் வினையில் பெண்கள்
          மன்னன் போருக்குச் செல்லும்போது பெண்களும் சென்றுள்ளனர்.  இவர்கள் பாசறையிலுள்ள பாவை விளக்கின் ஒளி குறையும் போதெல்லாம் நெய் வார்த்து, ஒளி குறையாது பாதுகாத்தனர்.  இவர்கள் தம்முடைய மேலாடையாகிய கச்சிலே, ஒளி வீசும் வாளினைச் சேர்த்துக் கட்டியிருந்தனர் என்ற செய்தியும் முல்லைப்பாட்டால் நமக்குக் கிடைத்துள்ளது.
……….திண்பிடி ஒள்வாள்
விரவுவரிக் கச்சின் பூண்ட, மங்கையர் (46 - 47)
என்ற முல்லைப்பாட்டு வரிகள் இச்செய்தியினை அறிவிக்கின்றன.
ஆடை, அணிகலன் மற்றும் சிகை ஒப்பனை
          போர்ப் பாசறையில் தங்கியிருக்கும் பெண்கள், பல நிறமமைந்த கச்சு என்னும் மேலாடையை அணிந்திருந்தமையும் குறுந்தொடி (வளையல்) அணிந்த முன் கையும், கூந்தல் தவழும் முதுகுப்புறத்தினையும் உடையவரெனவும் முல்லைப் பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதால் பெண்களின் உடை, அணி, சிகை ஒப்பனையைக் குறித்து அறிய முடிகிறது.  ஆண்கள் வெள்ளைத் துணியால் தலையில் தலைப்பாகைக் கட்டியிருந்தமையினை, ‘துகில் முடித்து போர்த்த(53) என்ற வரியினாலும், மெய்ப்பை (60) படம் (65)  என்று குறிப்பிடப்பட்ட சட்டையினை அணிந்திருந்தமையும் தெரிய வருகிறது.
          அரசன் கையிலே கடகம்என்ற ஆடவர்க்கான அணிகலனை அணிந்துள்ள செய்தி, ‘ஒரு கை முடியொடு கடகம் சேர்த்தி (76) என்பதாலும் முல்லைப் பாட்டின் வழி நாமறிந்து கொள்ள முடிகிறது.
பொழுதினைக் கணக்கிடும் கருவி
          ஒரு நாளின் பொழுதுகளை அளந்து கணக்கிட்டு அறிவதற்குக் கன்னல்’ (நாழிகை வட்டில்) என்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளனர்.  முல்லைப்பாட்டு இதனை, ‘குறுநீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப’ (58) என்று  முல்லைப்பாட்டு உணர்த்தியுள்ளது.
பாசறையின் அமைப்பு
பகை நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் மன்னன் முல்லைக்காட்டில் பிடவம் செடிகளை வெட்டி முள்ளால் வேலியமைத்து பாசறை அமைத்த செய்தியினை முல்லைப்பாட்டிலிருந்து பெறமுடிகிறது.  அங்குத் தழையால் கூரை வேயப்பட்டு  வீரர்களுக்குத் தங்குமிடங்கள் அமைத்திருந்தனர். இதில் மன்னனுக்கென்று உள்வீடு ஒன்றும் இருந்தது. அவ்வீடும் திரைச்சீலையால் இரண்டாகப்  பகுக்கப்பட்டிருந்தது. இதில் ஓர் அறையில் மெய்க்காப்பாளரான மிலேச்சியர்கள் தங்கியிருந்தனர். மற்றோர் அறை மன்னனின் பள்ளியறையாக அமைந்திருந்தது.
மன்னனின் பணியாளர்களாக வெளிநாட்டவர்
பாசறையில் மன்னனுக்குக் காவலாக யவனர் (கிரேக்கர்) இருந்த செய்தியினை முல்லைப்பாட்டால் அறியலாம்.
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து,
வலிபுணர் யாக்கை, வன்கண் யவனர்  (60 - 61)
வலிமையான உடலும், கண்டோர் அஞ்சும்படியான தோற்றமும் உடையவர் யவனர் என்பதாக முல்லைப்பாட்டில் காட்டப்படுள்ளது. இவர்கள் மட்டுமல்லாது, மன்னனுக்குக் காவலாக இருந்தவர்கள் மிலேச்சியருமாவர்.  இவர்கள் பெலுச்சிதானத்திலிருந்து வந்த துருக்கர். பெலுச்சி என்பது மிலேச்சி எனத் திரிந்ததாகக் கூறுவர். (முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை பக்கம். 92) இவர்கள் வாயால் பேச முடியாதவர்கள்.  உடல் உறுப்புகளின் மூலமாகவே செய்திகளைத் தெரிவிக்கக்கூடியவர்கள். அக்காலத்தில் மன்னர்கள் தம் அந்தபுரத்துச் செய்திகள் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக இத்தகைய வாய் பேசமுடியாத மிலேச்சியர்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதனையும் தெரிந்துகொள்ள முடிகிறது.
பண்டைத் தமிழரின் நம்பிக்கை
ஒன்றைப் பெறுவதற்காக, இறைவனை நினைத்து வேண்டிக் கொண்டிருக்கும்போது, நல்ல சொற்களை அயலில் உள்ளவர் கூறினால், தான் நினைத்த காரியமும் நல்லதாகவே நடக்கும் என்று பழந்தமிழர் நம்பியிருந்தனர்.  இந்த நம்பிக்கையை விரிச்சி கேட்டல்என்றனர்.  முல்லைப்பாட்டில், ‘விரிச்சி நிற்ப’ - என்பதாலும் நன்னர் நன்மொழி கேட்டனம் அதனால், நல்ல நல்லோர் வாய்ப்புள்என்பதாலும் இச்செய்தி புலனாகிறது.
இறைவனை வழிபட்ட முறை
இறை வழிபாட்டினைச் செய்வோர், நெல்லும் மலரும் தூவி, கைதொழுது வழிபட்டனர். நெல்லொடு, நாழி கொண்ட நறுவீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கை தொழுது
(
8 - 10)  என வரும் முல்லைப்பாட்டு அடிகளால்  இச்செய்தி தெரியலாகிறது.
விளக்கு
பாசறையிலும் வீட்டிலும் பாவை விளக்குகள் பயன்படுத்தப்பட்டமையினை அறிய முடிகிறது.
கையமை விளக்கம் நந்துதொறும் (49), ‘பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல (85) என்ற தொடர்கள் இதனை அறிவிக்கின்றன.  மணி விளக்கும் பயன்பாட்டில் இருந்துள்ளமையினை, ‘திருமணி விளக்கம்காட்டி’ (63) என்ற தொடர் தெரிவிக்கிறது.
வீடுகள்
பண்டைத் தமிழகத்தில் ஏழடுக்குகள் கொண்ட உயர்ந்த மாளிகைகள் இருந்தன என்ற செய்தியினையும், ‘இடம் சிறந்து உயரிய எழுநிலை மாடத்து (86) என்ற அடியினால் உணர முடிகிறது.
மலர்கள்
மழைக்காலத்துச் செழுமையில் மலர்ந்து கிடக்கும் மலர்களும் அவற்றின் தோற்றமும் நிறமும் முல்லைப்பாட்டாசிரியரால் அழகாக வருணிக்கப்பட்டுள்ளது.
செறிஇலைக் காயா அஞ்சனம் மலர,
முறிணர்க் கொன்றை நன்பொன் கால,
கோடல் குவிமுகை அங்கை அவிழ,
தோடுஆர் தோன்றி குருதி  பூப்ப, (93 - 96)
என்று காட்டிலே மலர்ந்திருக்கும் மலர்கள் ஒவ்வொன்றிற்கும், நீல மலர், கொன்றை மலர், வெண்காந்தள் மலர், தோன்றி மலர் என்று பெயர்கொடுத்து இயற்கையோடு இணைந்து வாழ்ந்த செந்தமிழ் நாட்டினை முல்லைப்பாட்டில் பார்க்க முடிகிறது.
வானியல்
          பண்டைத் தமிழர் வானியலில் வல்லுநர்களாக விளங்கியுள்ளனர்.  மழை உண்டாகும் முறையினை முல்லைப்பாட்டு ஆசிரியர் வருணிக்கும் அழகிலே இத்துறை பற்றிய அவர்களின் புலமை புலப்பட்டுள்ளது.
மேகங்கள் கடல் நீரைப் பருகி, வலமாக எழுந்து, மலையில் தங்கி, பின் உலகத்தை வளைத்து எழுந்து விரைந்து செல்லும். அவ்வாறு விரைந்து செல்லும் போது மழை ஏற்படுமென்று மழை பொழியும் தன்மையினை கவியழகும் இயற்கையறிவும் மிளிர வெளிப்படுத்தியுள்ளார் முல்லைப்பாட்டாசிரியர்.
பறவை
          முல்லைப்பாட்டில் ஏவுறு மஞ்ஞையின் நடுங்கி (84) என்று தலைவியின் துயருற்ற நிலையினை அம்பு தைத்த மயிலுக்கு உவமிப்பதால் மயில்பண்டைத் தமிழரின் வாழ்வியலில் இடம் பெற்றிருந்த நிலையினை அறிய முடிகிறது.
யிறு
          கட்டுவதற்கும் பிணைத்தற்கும் கயிற்றினைப் பழந்தமிழர் பயன்படுத்தியுள்ளனர்.
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்  (12)
கூடம் குத்திக் கயிறுவாங்கு இருக்கை (40)
என்பதனால் அறியலாகிறது.
அளவை
          நாழி என்ற முகத்தலளவை பயன்பாட்டில் இருந்துள்ளமையினை,
          நாழி கொண்ட        (9)
என்ற வரியின் மூலம் அறிய முடிகிறது.  இறை வழிபாட்டின்போது நாழிநெல் வைத்தல் இன்றும் நடைமுறையில் உள்ளதே.
பொன் வணிகர்
முல்லைப்பாட்டின் ஆசிரியர் காவிரிபூம்பட்டினத்துப் பொன் வணிகர் மகனார் நப்பூதனார் என்பதால், பொன்னின் வேறுபாட்டைப் பகுத்தறியும் பொன் வணிகர்இருந்துள்ளமையும் அறிய முடிகிறது.
பாத்திரம்
          குறுநீர்க் கன்னல் என்பது சிறிதளவு நீர் ஊற்றி வைத்திருக்கும் பாத்திரம் மட்டுமல்ல. நாழிகை வட்டிலாக பயன்பட்டதும் முல்லைப்பாட்டின் வழி அறியப்பட்டது. பிங்கலந்தை நிகண்டும், ‘கன்னலும் கிண்ணமும் நாழிகை வட்டில்என்றே கூறுகிறது.

கொடி
          முல்லைப்பாட்டில் அதிரல்என்ற காட்டு மல்லிகைக் கொடியும் வள்ளிக் கொடியும் இடம் பெற்றுள்ளது.
செடி
சேண்நாறு பிடவம் (25) என்று நெடுந்தொலைவிற்கு மணம் வீசும் பிடவம் என்ற செடி வகை குறிப்பிடப்பட்டுள்ளது.
முத்து
          தலைவனைப் பிரிந்து இருக்கும் தலைவியின் கண்களிலிருந்து நீர் வடிகிறது.  அந்நீரில் புலவருக்கு முத்துக்கள் தெரிகின்றன. பாண்டியன் தேவியைப் பாடியதாலா! பொன் வணிகர் என்பதாலா!
பூப்போல் உன்கண் புலம்புமுத்து உறைப்ப  (23)
தொழுதல்
          இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பண்பாடுடைய சமுதாயமாக தமிழ்ச் சமுதாயம் இருந்தது என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றுகளாகத் திகழ்கின்றன.
          இறைவனைத் தொழுதல், மன்னனைத் தொழுதல் என்று மரியாதைக்குரியோரைக் கை கூப்பித் தொழும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
நெல்லும் மலரும் தூவி கை தொழுது      (10)
தொழுது காண் கையர்  (56)
என்ற வரிகள் தமிழர்தம் பண்பாட்டைச் சொல்லும் எழிலான வரிகள்.
அலங்காரத் தொங்கல்
          பாசறையிலுள்ள மன்னனின் இல்லத்தில் புலி பொறிக்கப்பட்ட தொடர்ச்சங்கிலி தொங்கவிடப்பட்டிருந்தது.  அதில் விளக்கும் இருந்தது என்பதை முல்லைப்பாட்டு தெரிவிக்கிறது.
புலித்தொடர் விட்ட புனைமாண் நல்இல்,
திருமணி விளக்கம் காட்டி, (62 - 63)
ஆயர்குல மக்களின் உயர்வு
          முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர்குல மக்கள் சமுதாயத்தில் உயர்ந்த பண்புடையவர்களாக மதிக்கப்பட்டனர்.  ஆயர்குலப் பெண் கோவலர் பின்னே நின்று செலுத்த உம் தாயர் இப்பொழுதே வருவர்என்று கன்றிடம் கூறிய சொல், நற்சொல் (விரிச்சி) கேட்டு நின்ற பெண்களுக்கு நல்ல சொல்லாக அமைந்தது. சொல் மட்டுமல்ல நற்சொல், அதைச் சொன்னவர்களும் நல்லவர்கள் என்கிறாள் அம்மூதாட்டி,
நன்னர் நன்மொழி கேட்டனம்: அதனால்,
நல்ல, நல்லோர் வாய்ப்புள்(17 - 18)
நல்லவர்களின் வாய்ச்சொல் நன்மையினைத் தரும் என்று உறுதிபட கூறுகின்றபோது ஆயர்குல மக்கள் சங்ககாலச் சமுதாயத்தில் பெற்றிருந்த உயர்நிலையை அறிய முடிகிறது.
இசைக்கருவி
          இசைக்கருவிகளும் பண்டைத்தமிழ் மக்களின் பயன்பாட்டில் இருந்துள்ளமையினை இலக்கியங்கள் வழி அறிகிறோம்.  அவ்வகையில் முல்லைப்பாட்டாசிரியர் யாழிசை கேட்டு இன்புற்றவர் போலும்! வண்டின் ரீங்காரமும் யாழிசையாய் இன்பம் தருகிறது அவருக்கு!
          யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப, (8)
என்ற அடி, இசை சுவைத்த எம் முன்னோரின் இதயத்தைக் காட்டுவதாய் உள்ளது.
அருவி
          மழைக்காலத்தில் வீட்டின் கூரை கூடுமிடங்களில் மழைநீர் பெரிய வில் விழுந்து கொண்டிருப்பது அருவி வீழ்வது போன்ற ஓசையை ஏற்படுத்தியதாம்! அருவியும் அதன் ஓசையும் கண்டு கேட்டு இன்புற்று கவியும் படைத்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நம் தமிழர்களின் புலமையும் பண்பட்ட மொழியாய் இருந்த எம் தமிழின் முதன்மையும் எண்ண எண்ண வியப்பைத் தருகிறது.
          முடங்குஇறைச் சொரிதரும் மாத்திரள் அருவி  (87)
புணரி
          மன்னனின் பாசறை ஆரவாரத்தோடு காணப்படுகிறது. பாவில் அதைப் படைக்க நினைத்த புலவர் அதனை புணரிஎன்று குறிப்பிடுகின்றார்.
          படுநீர்ப் புணரியின் பரந்த பாடி (28)
          ஒலிக்கின்ற நீரையுடைய கடல் போல் அகன்ற பாசறை என்று விளக்குகின்றார்.  கடலுக்கு பைந்தமிழர் பயன்படுத்திய புணரி என்ற சொல் அழகிய சொல். முந்நீரினையும் புணர்ந்து நின்றதால் புணரியானதோ?
கான்யாறு
          மலையிலிருந்து ஓடிவரும் நீர், காட்டு வழியில் விரைந்து ஓடி வருகிறது.  இனைக் காட்டாறு அல்லது கான்யாறு என்றனர்.  முல்லைப்பாட்டில் மன்னன் பாசறை அமைக்கின்ற இடத்தைப் பற்றிக் கூறுமிடத்து,
          கான்யாறு தழிஇய அகல்நெடும் புறவில்என்கிறார்.  பகுத்தாய்ந்து பிரித்து அறிந்து சொற்களை வழங்கி இருக்கும் தமிழர்தம் திறன் உரைத்திடற்கரியது.
மெய்ப்பை
          ஆண்கள்  அணியும்  மேல் சட்டையைக் குறிக்க, ‘மெய்ப்பை’ (60), ‘படம்’ (66) என்ற சொல்லாட்சிகள் இடம்பெறுகின்றன.  உடம்பின் மேல் அணியும் ஆடை புதியதாகத் தமிழ்ச் சமுதாயத்தில் புகுந்த போது அதற்குத் தமிழர் புதிய சொற்களைப் புனைந்துள்ளனர்.  சட்டையைக் குறித்த, ‘மெய்ப்பை’ என்ற சொல் அழகிய சொல்.  
புதிய சொல் படைத்து மொழியைக் குன்றாது காத்து வளர்த்த தமிழர் தம் திறனும் வெளிப்படுகிறது.
முரண் - தொடை
          முரண்பட்ட சொற்களைத் தொகுத்து பாட்டின் இனிமையோடு மேலும் இனிமை சேர்த்துள்ளனர்.
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை, (6)
                       
 ற்றைத் தமிழகமும் - இற்றைத் தமிழகமும்
விரிச்சி கேட்டல்
          முல்லைப்பாட்டில் விரிச்சி கேட்டல் குறிப்பிடப்பெற்றுள்ளது. அன்றைய நாளில், நடக்கப்போகும் நிகழ்வினைப் பற்றி அறிவதற்குக் கோவிலில் சென்று இறைவனை வழிபட்டு நல்ல சொல்லுக்காகக் காத்திருப்பர்.  இன்றும் நாட்டுப்புற மக்களின் வாழ்வியலில் முக்கிய கூறாகவே இந்நம்பிக்கை இருந்து வருவது அனைவரும் அறிந்ததே.
நாழிநெல் வைத்து கைதொழுது வழிபடல்
          நாழியில் கொண்டு சென்ற நெல்லோடு நறுமணம் மிக்க முல்லை மலரையும் தூவி இறைவனைக் கைதொழுது வேண்டி நின்ற செய்தி முல்லைப்பாட்டில் இடம்பெறுகிறது.  இன்றும் நாட்டுப்புற மக்கள் தம் இல்லங்களில் நடத்துகின்ற இறைவழிபாட்டின்போது நாழிநெல் வைத்து கைதொழுது வழிபாடு செய்வதைக் காண்கிறோம். சங்ககால மக்களிள் பழக்க வழக்கங்களை இன்று வரை தமிழ் மக்கள் சுமந்து வருகின்றோம் என்பதே பெருமிதத்தை அளிக்கிறது.
முல்லைப்பாட்டில் போர்
          முல்லைப்பாட்டில் தலைவன் மேற்கொண்ட போர் முடிந்ததா? இல்லை போர் இடையே நிறுத்தப்பட்டதா?
          போர் நடைபெறுகிறது.  அன்று இரவு மன்னன் தன் நாட்டுப் படைகளுக்கு ஏற்பட்ட  சேதத்தை நினைத்துப் பார்க்கின்றான். குதிரையும் யானையும் போரின் காரணமாக படும் வேதனைகள், இறந்த வீரர்கள்  இத்தனையும் நினைக்கும்போது கூட மண்டு அமர் நசையோடு கண்படை பெறாஅதுஎன்றுதான் ஆசிரியர் நப்பூதனார் குறிப்பிடுகின்றார். போர் குறித்துப் பெரும் விருப்பத்தோடு இருக்கும் மன்னன் தூக்கம் கொள்ளாது, அன்றைய போரில் நடந்த நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்து, நாளைக்கு நடைபெற இருக்கின்ற போரில் இழப்பினைத் தவிர்த்து வெற்றியினைப் பெறும் வழிகளைச் சிந்தித்திருந்தனன் போலும்! அதனால் முதல் நாள் போர் முடித்துத் திரும்பி வந்து தூக்கம் கொள்ளாது, நீண்ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்த மன்னன், மறுநாள் போரிலே வெற்றி பெற்ற மன நிறைவோடு இனிய துயிலினைக் கொண்டான் என்பதனையும் நப்பூதனார் குறிப்பிடத் தவறவில்லை.
பகைவர் சுட்டிய படைகொள் நோன்விரல்
          நகைதாழ்க் கண்ணி நல்வலம் திருத்தி
          அரசுஇருந்து பனிக்கும் முரசுமுங்கு பாசறை
          இன்துயில் வதியுநன்          (76 - 80)
போரில் வெற்றிபெறா நிலையில் மன்னனின் மனநிலையையும் வெற்றி பெற்ற பின்பு மன்னனின் மனநிலையையும் காட்சிகளாய் வடித்திருக்கும் கவிஞரின் கவிநலம் நினைந்து நினைந்து இன்புறத்தக்கது.
                                   .......... வென்று பிறர்
          வேண்டுபுலம் கவர்ந்த ஈண்டுபெருந் தானையொடு
          விசயம் வெல்கொடி உயரி, வலன்ஏர்பு,
          வயிரும் வளையும் ஆர்ப்ப........... (89 - 92)
என்பதால் போரிலே வெற்றி பெற்று, பகை நாட்டு மன்னரின் இடங்களைக் கவர்ந்து பெரும் படையோடு வெற்றிக் கொடியை உயர்த்திப் பிடித்து வெற்றியை அறிவிக்கும்வகையில் ஊது கொம்பும் சங்கும் முழங்க  திரும்பி வருகின்றான் தலைவன் என்ற செய்தியினையே முல்லைப்பாட்டு தெரிவிக்கிறது. இதனால், முல்லைப்பாட்டின் தலைவன், போரினை இடையிலே முடிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
முல்லையும் வஞ்சியும்
          அகத்திணையான முல்லையினைப் பாடுகின்றபோது அதற்கு இயைந்த புறத்திணையான வஞ்சித் திணையையும் இணைத்துப் பாடியிருப்பது இந்நூலின் சிறப்பு.
          முல்லைத் திணைக்கு நிலம் காடு.  வஞ்சித்திணையின் நிலமும் காடே.  தலைவனைப் பிரிந்து  தலைவி முல்லை நிலமான வீட்டில் தங்கியிருத்தல் போலவே தவைவனும்,
எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித்த அன்றே       
(தொல்.புறத்திணை நூற்பா. 62)
என்று மண்ணாசை கொண்டு படையெடுத்து வரும் பகையரசனை வெல்வதற்குப் படையெடுத்துச் சென்று முல்லைநிலமாகிய காட்டில் பாடிவீடு அமைத்துத் தங்கியிருக்கிறான்.
          முல்லைத் திணைக்குரிய கடவுளான திருமாலை நினைவு கூரும் வகையில் மன்னனின் பள்ளியறைக் கோலம்.
          ஒருகை பள்ளி யொற்றி யொருகை
          முடியொடு கடகம் சேர்த்தி (75 - 76)
என்று காட்டப்பட்டுள்ளது.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் (388)
என்று மன்னனை இறை நிலையில் குறிப்பாக காட்டியிருப்பதுடன் காட்டிலும் வீட்டிலும் நடைபெறும் காட்சிகளை - தலைவன், தலைவி மன உணர்வுகளை 103 அடிகளில் படைத்துத் தந்த நப்பூதனாரின் கவியாக்கத் திறன் நினைந்து நினைந்து இன்புறத்தக்கது.
முல்லைத் திணையின் முதல் கரு உரிப்பொருள்களும் முல்லைப்பாட்டும்
முல்லைத் திணைக்குரிய முதல் கரு உரிப் பொருள்கள், முல்லைப்பாட்டில் பயின்று வரும் பான்மையினைக் காணலாம்.
முதற்பொருள் என்று சொல்லப்படுவது நிலமும் பொழுதும். நிலம் - முல்லை நிலம்.  காடு சார்ந்த பகுதி. கானம் நந்திய செந்நிலப் பெருவழி (97) அகனெடும் புறவு’ (24) என்பதாலும் முல்லை நிலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொழுதினை, சிறுபொழுது, பெரும்பொழுது என்று பகுப்பர். முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது மாலைக்காலம்.  இதனை, ‘சிறுபுன் மாலை (6) என்ற அடி உணர்த்துகிறது.  முல்லையின் பெரும்பொழுது கார்காலம் என்று சொல்லப்படும் மழைக்காலம்.  இக்காலத்தை, ‘பெரும் பெயல் பொழிந் (6) என்ற தொடர் தெரிவிக்கிறது.
          கருப்பொருள் என்பது தெய்வம், மக்கள், பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் என்பதாகும்.  முல்லைநில தெய்வயம் திருமால். நீர் செல நிமிர்ந்த மாஅல் போலஎன்பதால் முல்லைத் திணையின் தெய்வமும் ஆய்மகள்’, ‘கோவலர்என்ற சொல்லாட்சியால் அந்நிலத்து மக்களும், ‘மடமான் உகளஎன்பதால் அந்நிலத்த விலங்கும், ‘நறுவீ முல்லை’, ‘தோடர் தோன்றி என்பதால் முல்லை, தோன்றி முதலிய முல்லைநில மலர்களும், ‘செறியிலைக் காயா முறியிணர்க் கொன்றைஎன்று சுட்டப்படுதலின், அந்நிலத்து காயா, கொன்றை மலர்களும், ‘பரந்த பாடிஎன்பதால் முல்லை நிலத்துக்கு நீர் தருமிடமாகிய காட்டாறும். கைய கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்த்தரஎன்பதால் நிரை மேய்த்தல் தொழிலும், ‘வானம் வாய்த்த வாங்குகதிர் வரகுஎன்பதால் அந்நிலத்து உணவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
          முல்லைத் திணைக்கு உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும்’.  தலைவன் கடமை உணர்வோடு காட்டிலும், தலைவனின் நிலை உணர்ந்து தலைவி வீட்டிலும் இருக்கும் இருத்தல் ஒழுக்கம் முல்லைப்பாட்டின்வழி சிறப்புற உணர்த்தப்பெற்றுள்ளது.  தலைவியின் இருத்தல் ஒழுக்கம் மட்டுமல்ல; தலைவனின் கடமை உணர்வும் கூறப்பட்டிருப்பதே இந்நூலின் பெருஞ்சிறப்பு.
மன்னனின் அருள் உள்ளம்
          போரில் தனது வெற்றிக்குத் துணையாக இருந்து இறந்த வீரர்களையும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் விலங்குகளையும் நினைத்துப் பார்த்துக்கொண்டிருக்கும் அருள் உள்ளம் கொண்ட மன்னனை நேர்முக வர்ணனையாகக் கூறியுள்ளார் ஆசிரியர் நப்பூதனார்.  வேல்பட்டு புண்பட்டு வருந்தும் யானையையும், துண்டுபட்டு கிடக்கும் துதிக்கை துடிப்பதையும், சேணத்தையும் அறுத்துக் கொண்டு அம்புகள் பாயந்ததால் உணவு உண்ண முடியாது வருந்தும் குதிரைகளையும், செஞ்சோற்றுக் கடன் தீர்க்க போரில் இறந்து கிடக்கும் வீரர்களையும் நினைத்துப் பார்க்கும் மன்னனின் உள்ளத்து உயர்வை வடிக்க முடிந்த கவிஞரின் திறன் உணர்ந்து உணர்ந்து இன்புறத் தக்கது.
          பண்டைத் தமிழகத்தை அறிந்துகொள்ள மிகச் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ள இம்முல்லைப் பாட்டைக் காணும் பேற்றினை எமக்குத் தந்த தமிழன்னையின் புதல்வர்களுக்குத் தலை தாழ்ந்த வணக்கங்கள்.



2 கருத்துகள்: