புதன், 7 நவம்பர், 2012

குறுந்தொகை-6


 இயற்றியவர் -  பதுமனார்,
நெய்தல் திணை
தலைவி கூற்று
தலைவன் , வரைவிடை வைத்துப் பிரிந்தவழி ஆற்றாத தலைவி, தோழியிடம் சொல்லியது.(வரைவிடை வைத்துப் பிரிதல் – தலைவன், தலைவியை மணம் செய்து கொள்வதற்காகப் பொருள் ஈட்டச் செல்லுதல்)

நள்ளென் றன்றே யாமம் சொல் அவிந்து
 
இனிது அடங்கினரே மாக்கள் முனிவின்று
 
நனந்தலை உலகமும் துஞ்சும்
 
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.

கருத்துரை
நள் என்று யாமமும் இருக்கின்றது. மக்களும் பேச்சொழிந்து, இனிமையாகத் உறங்குகின்றனர். அகன்ற இடத்தையுடைய உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் வெறுப்பின்றி துயில்கின்றன. துயிலாதது, உறுதியாக நான் ஒருத்தி மட்டுமே.(தோழிகூட உறங்கிவிட்டாள் என்ற ஆதங்கம்)

சொற்பொருள் விளக்கம்
யாமம் – நடு இரவு, நள் என்று அன்றே – நள் என்ற ஓசையுடையதாய் இருந்ததே? மாக்கள் – மனிதர்கள், சொல் அவிந்து – பேசுதல் இல்லாது, இனிது அடங்கினரே – இனிதாக உறங்கினரே, நனந்தலை – அகன்ற இடத்தையுடைய, உலகமும் துஞ்சும் – உலகத்து அனைத்து உயிர்களும் உறங்கும், ஓர் யான் – நான் ஒருத்தி, மன்ற – உறுதியாக,(மன்ற என் கிளவி தேற்றம் செய்யும். தொல். இடையியல்.17), துஞ்சாதேனே – உறங்காதவளே.
சொல் அவிதல் என்ற சொல் மிகவும் நயமானது. மற்றவர்கள் அனைவரும் பண்பட்ட நிலையில் இரவுப் பொழுது வந்தவுடன் உறங்கச் சென்றுவிட்டனர். ஆனால், நானோ சொல் அவித்தல் இன்றி வருந்துகின்றேன் என்கிறாள். அவித்தல்- பக்குவப்படுத்துதல் தானே? அடுத்த சொல், முனிவின்றி. எனக்கு மட்டும்தானே முனிவு?தலைவன் மீது! மற்றவர்களுக்கு அது இல்லாததால், உறங்கச் சென்றுவிட்டனர்.
பாடலின் ஒவ்வொரு சொல்லிலும் ஓராயிரம் அர்ததங்கள் காணலாம். சங்கத் தமிழே! உன்னை ஆராதிக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக