புதன், 7 நவம்பர், 2012

குறுந்தொகை-4


                          
காமஞ்சேர் குளத்தார்.
நெய்தல் திணை
தலைவி கூற்று
தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் வருத்தத்தை நினைந்து கவலையுற்ற தோழிக்குத் தலைவி கூறியது.

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே;
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற் கமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே. 
                               -
கருத்துரை

வருந்தும் என் நெஞ்சே, வருந்தும் என் நெஞ்சே, இமைகளைத் தீய்ப்பது போல வெம்மையான என் கண்ணீரைத் தடுத்து துடைப்பவராய் நமக்கே அமைந்தவராய் நம்மோடு பொருந்தியிருந்த நம் காதலர், இப்போது நம்மோடு பொருந்துதல் இல்லாது இருத்தலால் வருந்தும் என் நெஞ்சே!

சொல்பொருள் விளக்கம்
நோம் என் நெஞ்சே- வருந்தும் என் நெஞ்சே, இமை தீய்ப்பன்ன இமைகளைச் சுட்டு கருக்குவதுபோல, கண்ணீர் தாங்கி- கண்ணீரைத் தடுத்து துடைத்து, அமைதற்கமைந்த- நமக்கென அமைந்தவராய் பொருந்தியிருந்த, நம்காதலர்- நம்முடைய காதலர், அமைவிலர் ஆகுதல்- பொருந்துதல் இல்லாது இருத்தல், நோம் என் நெஞ்சே- வருந்தும் என் நெஞ்சே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக